சென்னை: நீட் தேர்வு மாணவர்களுக்கு எத்தகைய பங்கை ஆற்றுகிறது என்பது குறித்தும், நீட் தேர்வு தற்போதுள்ள நிலைக்குத் தேவையா என்பது குறித்தும் விளக்குகிறார், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன்.
நீட் தேர்வு குறித்து அவர் கூறியதாவது, “சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவிலுள்ள சிறிய கிராமத்தில் சமூக நீதிக்காகப் போராடிய குடும்பத்தில் இருந்து, அரசுப் பள்ளியில் படித்து, உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்தேன்.
அதனால், எனக்கு சமூக நீதி குறித்தும், கிராமப்புற மாணவர்களின் நிலை குறித்தும் நன்றாகத் தெரியும். கடந்த ஆட்சியில் எனது தலைமையிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டது.
மருத்துவப் படிப்பில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பல்வேறு தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது, அரசுப்பள்ளி மாணவர்கள் வாய்ப்புகள் அற்ற சூழ்நிலையில் இருப்பதைக் கண்டறிந்தோம். தமிழ்நாடு மாணவர்களுக்கு மருத்துவப்படிப்புகளில் உரிய வாய்ப்புகள் கிடைத்தால் மட்டுமே, தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு மேம்படும் என்பதை எங்களுடைய ஆய்வில் தெரிவித்திருந்தோம்.
நீட் தேர்வால் பாதிப்படைவது அரசுப்பள்ளி மாணவர்கள் தான்:
நீட் என்பது மெரிட் அடிப்படையில் ஆனது என்ற கருத்தை ஏற்க முடியாது. 12 ஆண்டுகள் பள்ளிப் படிப்பை 3 மணி நேர நீட்தேர்வு கேள்விக்குறியாக்குகிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதி படைத்த மாணவர்கள், முழுக்க முழுக்க நீட் தேர்வுக்குரிய பயிற்சிப்படிப்பு என்று முழுக் கவனத்தோடு செயல்படக்கூடிய நிலையில், ஏழை கிராமப்புற மாணவர்கள் பொருளாதார ரீதியாக குடும்பச்சூழல் உள்ளதால், முழுவதும் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த இயலாத நிலையை உணர்ந்தோம்.
நீட் தேர்வு வருவதற்கு முன்னர், அரசுப் பள்ளி மாணவர்கள் 38 பேர் மருத்துவப்படிப்பில் சேர்ந்தனர். ஆனால், நீட் தேர்வு 2017ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பின்னர் 6 பேர் மட்டுமே மருத்துவப்படிப்பில் சேர்ந்தனர்.