கரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்படைக்க வேண்டும் என துணை வேந்தருக்கு சென்னை மாநகராட்சி கடிதம் எழுதியது. ஆனால், விடுதிகளில் மாணவர்களின் உடமைகள் உள்ளதால் விடுதிகளை ஒப்படைக்க இயலாது என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை மாநகராட்சி அலுவலர்கள் சந்தித்து பேசியதையடுத்து, மாணவர்கள் விடுதியை கரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் தெரிவித்தது.
மேலும், மாணவர்கள் விடுதியை காலி செய்யும் விதமாக வெளியூரில் தங்கி உள்ள மாணவர்கள் சென்னை வந்து விடுதிகளை காலிசெய்து, தங்கள் ஊர்களுக்கு பாதுகாப்பாக செல்வதற்கான வசதிகளை சென்னை மாநகராட்சி செய்ய வேண்டும். மாணவர்களின் உடமைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கும், அவர்கள் வந்து செல்வதற்கும், உரிய அனுமதியை மாநகராட்சி அலுவலர்கள் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் எழுதியுள்ள கடிதத்தில், ”கரோனா தனிமைப்படுத்தும் முகாம் அமைப்பதற்காக மாணவர்கள் தங்கள் விடுதிகளை காலி செய்ய வேண்டும். கரோனா தனிமைப்படுத்தும் முகாம்கள் முடிவடைந்த பின்னர் மாநகராட்சி ஹாஸ்டலை தங்களிடம் ஒப்படைக்கும். அதன் பின்னர் மீண்டும் மாணவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:காவல் ஆய்வாளர் உள்பட 77 பேருக்கு கரோனா தொற்று உறுதி