சென்னை:தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்விற்கு கடந்த மே மாதம் 5ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 4ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி வெளியிடப்பட்டன. ஆன்லைன் மூலம் 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, கடந்த மாதம் ஜூலை 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு கடந்த மாதம் ஜூலை 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு, இதுவரையில் 442 கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 19 ஆயிரத்து 346 இடங்களில், ஒற்றைச் சாளர முறையில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 783 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 12 ஆயிரத்து 59 இடங்களும் , தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 3 ஆயிரத்து 143 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான விளையாட்டு பிரிவில், 385 மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து முதல் சுற்று கலந்தாய்வு முடிவில் 16 ஆயிரத்து 64 மாணவர்கள் அவர்களது இடங்களை தேர்வு செய்தனர்.
இந்த நிலையில் 2 ஆம் சுற்று கலந்தாய்வில் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையில் அவர்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் பொதுப்பிரிவின் தரவரிசை பட்டியலில் 22 ஆயிரத்து 762 வது இடம் தொடங்கி, 87 ஆயிரத்து 49 வரையில் உள்ள 64 ஆயிரத்து 332 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். முதல் கலந்தாய்வில் பங்கேற்ற பின்னர், இரண்டாம் சுற்று கலந்தாய்விற்கு 6 ஆயிரத்து 783 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர்.
இவர்களில் 49 ஆயிரத்து 719 மாணவர்கள் அவரவர் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்திருந்தனர். அதில் 45 ஆயிரத்து 816 மாணவர்களுக்கு கல்லூரியில் தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டன. குறிப்பாக 35 ஆயிரத்து 474 மாணவர்களுக்கு இறுதியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் உள்ள தரவரிசை பட்டியலில் ஆயிரத்து 75 முதல் 8 ஆயிரத்து 586 வரை உள்ள 7 ஆயிரத்து 952 மாணவர்களும், முதல் சுற்று கலந்தாய்வில் தங்களது இடத்தை தேர்வு செய்யாமல், இரண்டாம் சுற்று கலந்தாய்வில் கூடுதலாக 279 மாணவர்கள் பங்கேற்றனர்.