உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் துப்பாக்கி கண்காட்சி சென்னை:தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நேற்று (ஜனவரி 07) துவக்கி வைத்தார். இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில் வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்.
2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவோம் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இலக்கை நிர்ணயித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த மாநாட்டில் அமெரிக்க, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகள் கலந்து கொண்டது.
இதனைத் தொடர்ந்து வர்த்தக மையத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் பல்வேறு வகையான கண்காட்சி அரங்குகள் பொது மக்களின் பார்வைக்கான வைக்கப்பட்டது. இதில், பெரிய நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்பு பொருள்களையும் இனி வரக்கூடிய தயாரிப்பு பொருள்களின் மாதிரிகளையும் பொது மக்களின் பார்வைக்காக வைத்திருந்தனர்.
இதில் பல அரங்குகளில் பொது மக்களுடைய வருகை என்பது அதிகமாக இருந்தது. குறிப்பாக, திரையில் மட்டுமே இதுவரை பார்த்திருந்த துப்பாக்கிகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. ஸ்குவாட் ஆட்டோமேட்டிக் வெப்பன் (Squad automatic weapon) என்ற நிறுவனம் தயாரித்த சிறிய ரக துப்பாக்கி (Assult) முதல் பெரிய ரக துப்பாக்கிகள்(Snipper) வரை காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.
இந்த துப்பாக்கி ரக வகைகளைக் காண்பதற்காக மக்கள் அதிக அளவில் கூடினார்கள். குறிப்பாக, சிறிய ரக துப்பாக்கிய வகைகளை எப்படிக் கையாள வேண்டும் துப்பாக்கியில் தோட்டாக்களை எப்படி உட்புகுத்த வேண்டும் என பல்வேறு தகவல்களைப் பொதுமக்களுக்கு அங்கு இருந்த நிறுவனத்தின் உதவியாளர்கள் எடுத்துரைத்தனர்.
மேலும், பெரிய ரக துப்பாக்கி வகைகளை எப்படி கையாள்வது அதில் என்ன வகையான தோட்டாக்கள் பயன்படுத்தப்படும் மேலும் எவ்வளவு தூரத்தில் இருந்து இலக்குகளை துல்லியமாக சுட முடியும் போன்ற பல்வேறு தகவல்களை பொதுமக்களுக்கு நிறுவனத்தின் உதவியாளர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக Assault சிறிய வகையான துப்பாக்கிகள் சுமார் 100 மீட்டர் முதல் 700 மீட்டர் வரை இலக்கை சுட முடியும் எனவும் குறிப்பிட்ட சில வகை துப்பாக்கிகளில் 1000 முதல் 5000 வரை தோட்டாக்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்தனர். மேலும் பெரிய ரக துப்பாக்கியான ( SNIPPER) வகை துப்பாக்கிகள் சுமார் 2.4 கி.மீ தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளதாக அங்கிருந்த நிறுவனத்தின் உதவியாளர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கிகளை பார்வையிட்ட மாணவர்களிடம் இது குறித்து கேட்ட பொழுது, இது வரையில் சினிமாக்கள், காவல்துறை மற்றும் ராணுவத்தினர் மட்டுமே பார்த்த துப்பாக்கிகளை முதன்முறையாக கையில் எடுத்து பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் துப்பாக்கி குறித்து பல தகவல்களை திரையிலும் சமூக ஊடகங்களும் கேட்டிருக்கிறோம் ஆனால் அப்படி எதுவுமே உண்மை இல்லை என்பதை இப்பொழுதுதான் நேரில் கேட்டு தெரிந்து கொள்கிறோம் என்றனர்.
மேலும், ஒரு துப்பாக்கியை அவ்வளவு எளிதாக பயன்படுத்த முடியாது எனவும் துப்பாக்கி குறித்து சரியான புரிதல் இல்லை என்றால் அது நமக்கே ஆபத்தாகிவிடும் என்ற பல்வேறு தகவல்களையும் இப்பொழுது கேட்டு தெரிந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்த அந்நிறுவனத்தின் உதவியாளர்கள் எவ்வளவு சந்தேகங்கள் கேட்டாலும் எல்லா கேள்விகளுக்கும் மிக பொறுமையாக பதில் அளிக்கிறார்கள் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ரூ 45 ஆயிரம் செலவில் உருவான மினி ஜீப்.. வியப்பை ஏற்படுத்திய 'வில்லேஜ் விஞ்ஞானி'