சென்னை:தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை(மே.8) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பொறியியல், மருத்துவம் சார்ந்த படிப்புகள், கலை-அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்வார்கள்.
கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பைப் பெறும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. படிக்கும்போதே மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், ஆங்கில மொழித்திறன் அறிவு, போட்டித்தேர்விற்கு தயாராக பயிற்சி போன்றவையும் அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023 - 2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதளம் மூலம் நாளை (மே.8) முதல் வரும் 19ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பக் கட்டணம் 48 ரூபாய், பதிவுக் கட்டணம் 2 ரூபாயும் சேர்த்து 50 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை, பதிவுக் கட்டணம் 2 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும்.