தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஒருமுறை உபயோகப்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை மாணவர்கள் பயன்படுத்தினால் அவற்றை கைப்பற்றி தலைமை ஆசிரியர்கள் முறைப்படி அழிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "மத்திய அரசு மகாத்மா காந்தி பிறந்த நாளில் தொடர்ந்து ஒரு வாரம் பிரதமர் தலைமையில் தூய்மை இந்தியா திட்டத்தை 2017ஆம் ஆண்டு முதல் செயல்படுத்திவருகிறது. தூய்மை இந்தியா இயக்கத் திட்டத்தில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், திரையுலகினர், உள்ளாட்சித் துறையின் பிரதிநிதிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தூய்மை குறித்தும், கழிவறை பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர், பயன்படுத்தப்பட்ட நெகிழிவுக் கழிவுகளை ஒழிக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிக் கழிவுகள் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தியிருந்தார்.
நெகிழிப் பொருட்களை பயன்படுத்தத் தடைவிதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு எனவே நாடு முழுவதும் செப்டம்பர் 11ஆம் தேதி ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் அக்டோபர் 2, 3 ஆகிய தேதிகளில் பயன்படுத்தப்படும் நெகிழிக் கழிவுகளை பெறுவதுடன், அதனை மறுசுழற்சி செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
அந்தவகையில், பள்ளிகளிலும் மாணவர்கள் தங்களின் வீடுகளில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை உபயோகிக்க அனுமதிக்கக் கூடாது. அதுபோன்ற உபயோகித்தால் அவற்றைப் பெற்று முறைப்படி அழிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.