சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் இன்று(ஜூன் 16) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவை ஆளுநர் தாமதப்படுத்துவதைக் கண்டித்தும், துணை வேந்தர்கள் நியமனத்தில் தலையீடு செய்வதைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கு ஏதுவாக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுக மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மாணவர் அமைப்பினரும் கலந்து கொண்டனர். அப்போது, ஆளுநரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக ஆளுநர் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி "கெட் அவுட் ரவி" என்றும் கோஷமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திமுக மாணவர் அணிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி எழிலரசன், "நீட் தேர்வின் கலந்தாய்வை அந்தந்த மாநிலத்தில் நடத்த வேண்டும். தமிழக மாணவர்களை வேறொரு மாநிலத்திற்கு அனுப்பி எந்த வசதியும் இல்லாமல் அவர்களை துன்புறுத்த பாஜக திட்டம் திட்டி உள்ளது, அதனை ஒருபோதும் ஏற்க மாட்டாம்.
ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்து, பட்டமளிப்புக்காக காத்திருக்கிறார்கள், அதனை உடனடியாக ஆளுநர் பரிசீலனை செய்ய வேண்டும். மத்திய பாஜக அரசினர் சார்பாக ஆளுநர் நடந்து கொண்டிருக்கிறார். பாஜகவின் செயல் தலைவராகவே சந்திரமுகி போல கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார். அவரின் செயல்பாட்டிற்கு இந்த மாணவர் கூட்டமைப்பு பெரும் கண்டனத்தை தெரிவிக்கிறது.
முதற்கட்டமாக தந்தை பெரியார் பல்கலைக்கழகத்தில் 28ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாக இருந்தாலும், இனி அடுத்தடுத்த பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும்.