சென்னை மேடவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர், வீட்டுப்பாடங்களை முடிக்கவில்லை எனக்கூறி எட்டாம் வகுப்பு படித்துவரும் கார்த்திக் என்ற மாணவனின் தலையில் இரும்பு ஸ்கேலால் அடித்ததாகக் கூறப்படுகிறது.
தலை நரம்பில் இதனால் காயம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான மாணவன் கார்த்திக், நரம்புகள் பாதிக்கப்பட்டு அடுத்த சில நாள்களில் இடது கண் பார்வையில் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவனின் பெற்றோர் அரசு மருத்துவமனையில் அவனை சிகிச்சைக்காக அனுமதித்தபோது கண்பார்வை முழுமையாக இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கண் பார்வை இழந்த மாணவன்: தாமாக முன்வந்து வழக்கைப் பதிந்த மனித உரிமைகள் ஆணையம் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் அளித்த புகாரில், பள்ளிக்கரணை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், இந்தத் தகவல் செய்தித்தாளில் வெளியானதை அடிப்படையாக வைத்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவர் துரை. ஜெயச்சந்திரன், “தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனைகளை ஆசிரியர்கள் வழங்குவதைத் தடுக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மாணவனைத் தாக்கிய ஆசிரியர் மீது எடுத்தத் துறை ரீதியிலான நடவடிக்கை என்ன?
மேடவாக்கம் அரசுப் பள்ளியில் ஆசிரியர் தாக்கிக் கண்பார்வை பறிபோன மாணவனுக்கு இழப்பீட்டுத் தொகை பெற்று கொடுக்கப்பட்டதா?" எனக் கேள்வி எழுப்பி, இந்தக் கேள்விகளுக்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆகியோருக்கு இரண்டு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : சென்னை விமான நிலையத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்