சென்னை:மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர், மத்திய மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து சேர்க்கை நடத்தப்படுகிறது. மீதமுள்ள இடங்கள் பிற மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
இந்தப் பள்ளிகளில், 1ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும்போது அந்த ஆண்டு மார்ச் 31 அல்லது ஏப். 1இல், ஐந்து வயது நிறைந்திருக்க வேண்டும் என்ற விதி, பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும், 2022- 23ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், 1ஆம் வகுப்பில் சேரும் மாணவர்கள், புதிய கல்வி கொள்கையின்படி, ஆறு வயதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.