சென்னை:ஏழு கிணறு தையப்ப முதல் தெருவை சேர்ந்தவர் கேசவன். இவரது கடைசி மகன் கங்காதரன் (வயது 15). இவர் சென்னை முத்தியால்பேட்டை பிரகாசம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவன் வகுப்பு அறைக்கு செல்ல இரண்டாவது மாடிப் படிக்கட்டு வழியாக ஏறும்போது திடீரென கங்காதரன் மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த சக நண்பர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
பின் மாணவர்கள் அவரை தூக்கி கொண்டு கீழே கொண்டு வந்து ஆசிரியர்கள் உதவியோடு கங்காதரனை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த கங்காதரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவனுக்கு வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கலாம் என முதற்கட்டமாக தகவல் வெளியானது. இந்த நிலையில் மாணவனின் உறவினர்கள், மாணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளனர். ஆகவே போலீசார், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். பின்னர் மாணவனின் உடலை உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.