சென்னை:
சென்னை குரோம்பேட்டையில் தனியார் மருத்துவக் கல்லூரி வகுப்பறையில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவிலம்பாக்கம் அருகே உள்ள எஸ்.கொளத்தூரை சேர்ந்தவர் தேவேந்திரன். விமான நிலையத்தில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் மோகன லட்சுமி (வயது 19). மோகன லட்சுமி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி மருத்துவ உதவியாளர் படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று (அக். 7) மோகன லட்சுமி வழக்கம் போல் காலையில் கல்லூரிக்கு சென்று உள்ளார். மதியம் வகுப்பறையில் கணினி வழி தொடுதிரையில் தொட்டு மாணவர்களுக்கு பாடத்தை விளக்கிக் கொண்டிருந்து உள்ளார். அப்போது திடீரென வகுப்பறையிலேயே மோகன லட்சுமி மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போலீசார் மாணவியின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்விற்கு பின்னர் தான் மாணவி இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். சென்னையில் கல்லூரி வகுப்பறையில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தீவுத் திடலில் பட்டாசு விற்பனை டெண்டர் விவகாரம்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!