சென்னை அபிராமபுரம் பசுமைவழிச் சாலையில் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இயங்கிவருகிறது. இந்த தேர்வு பயிற்சி மையத்தில் யூபிஎஸ்சி முதுநிலை படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடத்தை இலவசமாக வழங்கி ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பயிற்சியை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்தில், வேறொரு பயிற்சி மையத்தில் முதல் நிலை தேர்வு எழுதிய மாணவரான வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜ்மஸ்தான் என்பவர் சேர்ந்து தங்கி ஐ.ஏ.எஸ் படிப்பிற்கான பயிற்சியை படித்து வந்துள்ளார்.
கடைசியாக நடைபெற்ற யூபிஎஸ்சி தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வை எழுதியுள்ளனர். ஆனால் ராஜ்மஸ்தான் மட்டும் தேர்வை எழுதாமல் இருந்ததால் சந்தேகமடைந்த பிற மாணவர்கள் வார்டனிடம் தகவல் அளித்துள்ளனர்.
இதனால் ராஜ்மஸ்தானிடம் பயிற்சி மைய அலுவலர் விசாரித்தபோது வேறொரு நபரின் வரிசை எண்ணை அச்சடித்த போலி ஹால் டிக்கெட் வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் உடனடியாக அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மைய அலுவலர் அபிராமபுரம் காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில் ராஜ் மஸ்தானை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
விசாரணையில் ராஜ்மஸ்தான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஐ.ஏ.எஸ் அலுவலராக ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். ஆனால், தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படிக்க வேண்டுமென்றால் லட்சக்கணக்கில் ரூபாய் செலவாகும், அதற்குண்டான பணம் இல்லாததால் போலியாக ஹால்டிக்கெட்டை தயாரித்து அரசு தேர்வு மையத்தில் சேர்ந்து தேர்வு எழுத நினைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். ராஜ்மஸ்தானுக்கு போலியான ஹால்டிக்கெட்டை தயாரித்து கொடுத்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பிப்ரவரி 9ஆம் தேதி முதல் செவிலியர்கள் தொடர் தர்ணா போராட்டம்