சென்னை:ஆவின் டிலைட், டயட் ரக பால் பாக்கெட்டுகளின் அளவு மற்றும் விற்பனை விலை மாற்றத்திற்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “வரலாறு காணாத தொடர் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் கூட, உபத்திரம் செய்யக்கூடிய வகையில் லிட்டருக்கு 200% வரை பால் விற்பனை விலையை உயர்த்தி ஆங்கிலப் புத்தாண்டுப் பரிசாக ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆவின் நிர்வாகம் சத்தமின்றி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
இயற்கை பேரிடரால் மக்கள் அல்லல்பட்டு வரும் நிலையில் துறை சார்ந்த அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே பால் விற்பனை விலை உயர்வை ஆவின் நிர்வாகம் துணிச்சலோடு அமல்படுத்தியுள்ள போதும் அதுகுறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடாமல் மனோ தங்கராஜ் அமைதி காப்பதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
குறிப்பாக பால் பாக்கெட்டுகள் விற்பனையின் போது வாடிக்கையாளர்களுக்கு சில்லறை பிரச்னை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக என்கிற காரணத்தைக் கூறி 3.5% கொழுப்பு சத்துள்ள ஆவின் டிலைட் பால் 180 மி.லி பாக்கெட்டில், பெயருக்கு 10 மி.லி அளவைக் கூடுதலாக்கி விட்டு, அதன் விற்பனை விலையை 9.50-லிருந்து 10 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
மேலும், கூடுதலான 10 மி.லி அளவுள்ள பால் பாக்கெட்டிற்கு 0.50 காசுகள் உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளதோடு, பால் முகவர்கள், சில்லறை வணிகர்களின் பால் பாக்கெட் விற்பனைக்கான லாப தொகையை 0.90 காசுகளில் இருந்து 0.50 காசுகளாக குறைத்து, பால் முகவர்களின் வயிற்றிலும் அடித்திருக்கிறது ஆவின் நிர்வாகம்.
அதுமட்டுமின்றி 1.5% கொழுப்பு சத்துள்ள 250 மி.லி ஆவின் டயட் பால் பாக்கெட்டில் 10 மி.லி அளவை குறைத்து ரூபாய் 10.25 எனும் விற்பனை விலையில் இருந்து 240 மி.லி பாக்கெட்டிற்கு 10 ரூபாயாக விற்பனை விலையை மாற்றி அமைத்துள்ளது.