சென்னை: மாடுமுட்டியதில் படுகாயமடைந்த சிறுமி :சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர், ஹர்சின் பானு. இவரது மூத்த மகள் ஆயிஷா(9)எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம் போல பள்ளியை விட்டு தாய் ஹர்சின் பானு, அவரது இரு மகள்களையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
எம்.எம்.டி.ஏ காலனி ஆர் பிளாக் இளங்கோ தெரு வழியாக நடந்து சென்றபோது, அவ்வழியாக 7 மாடுகள் சென்ற நிலையில், அதில் ஒரு மாடு திடீரென சிறுமி ஆயிஷாவை கொம்பால் குத்தி தூக்கி வீசியது. பின்னர் கீழே விழுந்த சிறுமியை மாடு விடாமல் குத்திய நிலையில் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கற்களை மாடு மீது வீசி சிறுமியை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால், அதை பொருட்படுத்தாத மாடு சிறுமியை குத்தி தூக்கிய நிலையில் இருந்தபோது பிரம்பால் மாட்டை அடித்து துரத்தி உள்ளனர்.
மாடு குத்தி தூக்கிவிசியதில் படுகாயமடைந்த சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்கச் செய்துள்ளது.
மாட்டின் உரிமையாளர் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு:இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் மாட்டின் உரிமையாளர் விவேக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் 2 மாடுகளையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பிடித்துச் சென்று தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் மாட்டின் உரிமையாளருக்கு விதித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் கால்நடையினால் பல்வேறு விபத்துகள் நடக்கின்றன.
மேலும், மாநகராட்சி சார்பில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2000 அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆனாலும், சாலைகளில் கால்நடைகளால் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணமாக உள்ளது.
எங்கே சென்றது மனித நேயம்:மாடு முட்டியதில் நிலைகுலைந்த சிறுமி வழியால் துடித்தது ஒருபுறம், தன் மகளைக் காப்பாற்ற செய்வதறியாது திக்கி தடுமாறிய தாய் மறுபுறம் என இருந்த இக்கட்டான சூழலில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த சிலரோ தங்களுக்கு தெரிந்த யுக்திகளை பயன்படுத்தி சிறுமியை மீட்க முயற்சித்த நிலையில், அவர்களுக்குப் பக்க பலமாகவோ அல்லது அபாயத்தில் இருக்கும் சிறுமியை மீட்க வேண்டும் என்ற எண்ணமோ துளியும் இல்லாமல் யாருக்கு என்ன ஆனால் நமக்கு என்ன என்பதைப் போல பத்திரமாய் வீட்டின் கேட்டிற்குப் பின்னால் ஒருவர் நின்றுகொண்டு, நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.