சென்னையில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், ஜூன் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனால் போக்குவரத்து காவல்துறை, பல்வேறு விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. அதில், "அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
மேலும், மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே ஆட்டோ, டாக்ஸி, இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். குறிப்பாக அத்தியாவசிய பொருள்களை வாங்க செல்லும் பொதுமக்கள் வாகனங்களை பயன்படுத்தக்கூடாது.
மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க இரண்டு கி.மீ. தொலைவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். உணவு டெலிவரி, வங்கி, பால் வினியோகம், பெட்ரோல், சரக்கு வாகனங்கள், சமயல் எரிவாயு ஊழியர்கள் வாகனங்களை ஓட்ட அந்தந்த நிறுவனங்களிடமிருந்து முறையான அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக ஜூன் 21, 28ஆம் தேதிகள் அன்று தளர்வுகள் ஏதுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங்களை தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது.