சென்னை:ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் (Madras High court) வழக்கு தொடர்ந்தனர். அதில், தங்களுக்கு எதிராக புகார் அளித்தவர் மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுக்கள் கடந்த முறை நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, " வேலை மோசடி புகார் தவிர, கொலை திட்டத்திலும் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவர் ஒரு தொடர் குற்றவாளி" என்று தெரிவித்தார்.