இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் மயில் கூறுகையில், "கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிவருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபால், சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி ஆசிரியர், பத்மசேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராகப் பணியாற்றிய கெபிராஜ், சென்னை பிரைம் தடகளப் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் என பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆசிரியர்களின் பட்டியல் நீண்டுகொண்டிருப்பது மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மயிலாடுதுறை தனியார் பள்ளி ஆசிரியர் அண்ணாத்துரை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் பணியில் உள்ள இதுபோன்ற ஒருசில கறுப்பு ஆடுகளின் இழிசெயலால் ஆசிரியர் சமுதாயமே மிகப்பெரிய மனவேதனைக்கு உள்ளாக வேண்டியுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித் துறை விரைவில் வெளியிட உள்ளதாக அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.