சென்னை:ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கூடுதல் கட்டணம் பெறப்படுவது குறித்த புகார்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்," உலக சுகாதார அமைப்பு, தற்போதுள்ள கரோனா தொற்று பாதிப்பினை உலகளாவிய பொது சுகாதார பேரிடராகவும், இது கட்டுப்படுத்தக் கூடிய நிகழ்வாகவும் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று பட்டியலிடப்பட்ட நோயாக அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்று பரவல் தன்மையின் நிலையைக் கருத்தில் கொண்டு, தொற்று நோய்க்கான சிகிச்சைக்குத் தமிழ்நாட்டிலுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளின் அங்கீகரிக்கப்பட்டுள்ள பட்டியலினை அரசு வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எளிதில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பொது மக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில், சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழ்நாடு அரசே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
இதன்படி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கரோனா நோய் சிகிச்சை செலவுகளையும், தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீண்டும் வழங்கும்.