சென்னையில் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை நீக்கும் வகையில் "சைபர் ஹேக்கத்தான்" என்ற போட்டியை நடத்த திட்டமிட்டு, அதில் வெற்றி பெறும் அணியினருக்கு 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்தது. இந்த போட்டியில் சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் வாகனங்களின் பதிவு எண்களை மங்கலாக இல்லாமல் தெளிவாக காட்டும் வகையிலும், பதிவாகும் குற்றவாளிகளின் முகங்களை தெளிவுபடுத்தி காட்டும் வகையிலும், இரவு நேரங்களில் அதிக வெளிச்சத்துடன் வரும் வாகனங்களின் பதிவு எண்களை தெளிவாக காட்டும் வகையிலும் என்று மொத்தம் 8 தலைப்புகளின் கீழ் 3 பேர் கொண்ட குழுவாக பங்கேற்க அறிவுறுத்தப்பட்டது.சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் டிசம்பர் 3 மற்றும் 10ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சைபர் ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30ஆம் வரை கால அவகாசம் விதிக்கப்பட்ட நிலையில் சைபர் வல்லுனர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இப்போட்டியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற குழுவினருக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் நேற்று (டிசம்பர் 26) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பங்கேற்று போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த குழுவினருக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.