சென்னை: தாம்பரம் மாநகராட்சியில் 69 ஆவது வார்டு பதுஞ்சேரி ஏரி அருகே சுடுகாடு சாலையில் இருபுறமும் கோழி இறைச்சி கழிவுகள், ஆடு மற்றும் மாட்டு போன்ற கால்நடைகளின் கழிவுகள் கொட்டப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்தநிலையில் தாம்பரம் மாநகராட்சி 69 ஆவது மாமன்ற உறுப்பினர் வாட்டர் ராஜ் வழக்கம் போல் இன்று (ஆக.31) காலை அப்பகுதியில் சென்று பார்த்தபோது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அந்த பகுதி முழுவதும் கோழி, ஆடு, மாடு போன்ற இறைச்சிக் கழிவுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டிருந்தது. அதன் அருகே 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளன. அதில், ஒரு தாய் நாய் கொல்லப்பட்ட நிலையில் அருகே நாய்க் குட்டிகள் கத்தியபடி இருந்துள்ளது. இதனைக் கண்ட மாமன்ற உறுப்பினர் உடனடியாக அந்த நாய் குட்டிகளுக்கு பாக்கெட் பால் வாங்கி வந்து குடிக்க வைத்துள்ளார்.
அங்கு இது போன்று சட்ட விரோதமான முறையில் இரவு நேரங்களில் இறைச்சி கழிவுகளைக் கொட்டி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள மர்மநபர்கள், பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவித்து வருகின்றனர். இந்த நிலையில் 20க்கும் மேற்பட்ட தெருநாய்களை கொடூரமான கொன்று பொது வெளியில் வீசி சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்தார்.