சென்னை: கோட்டூர்புரம் அவ்வை காலனி மண்ணப்பா தெருவைச் சேர்ந்தவர், வேதவல்லி(52). இவர் கடந்த 20 வருடங்களாக கோட்டூர்புரம் துலுக்கானத்தம்மன் கோயில் 1வது தெருவில் ஃபேன்சி ஸ்டோர் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று வேதவல்லி வழக்கம் போல் ஃபேன்சி ஸ்டோரில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவரில் ஒருவர், இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு இருந்த நிலையில் மற்றொருவர் ஃபேன்சி ஸ்டோர் உள்ளே சென்று 100 ரூபாய் கொடுத்து பவுடர் டப்பா ஒன்று வேண்டும் என கேட்டுள்ளார்.
வேதவல்லி கடையில் இருந்த பவுடர் டப்பா ஒன்றை எடுத்துக் கொடுத்துவிட்டு, சில்லறை 70 ரூபாயை கொடுத்துள்ளார். அப்போது மர்ம நபர் வேதவல்லி கழுத்தில் அணிந்திருந்த ''மூன்று சவரன் தங்கச் சங்கலியை கொடுங்கள்... நான் மந்திரித்து கொடுக்கிறேன். உங்கள் கடைக்கு நல்ல வசூல் ஆகும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய வேதவல்லி சிறிதும் கூட யோசிக்காமல் மர்ம நபர் கொடுத்த 100 ரூபாயும் தன் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியினையும் கழற்றி கொடுத்துள்ளார். பின்னர் மர்ம நபர் அந்த தங்கச் சங்கிலியை 100 ரூபாய் நோட்டுக்குள் வைத்து மடித்து பத்து முறை 'பங்களா, பங்களா' என்று கூறி அந்த நோட்டை கல்லாப் பெட்டியில் வைத்து மந்திரம் செய்துள்ளார்.