சென்னையில் புதிதாகக் கட்டப்படவுள்ள, கட்டப்பட்டு வரும் எட்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று (ஆக.17) பார்வையிட்டார்.
இந்த குடிசை மாற்று குடியிருப்புகள், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளைப் போல தரமான கட்டடங்களாக அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், 22 ஆயிரம் குடும்பங்கள் கண்டறியப்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அவர்களுக்கான வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அவர் முன்னதாக உறுதியளித்தார்.
தரமற்ற கட்டடங்கள், இடிந்து விழும் நிலையில் கதவு ஜன்னல்கள்
இந்நிலையில், சென்னை, புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் கட்டடம் தரமற்றும், சிமென்ட் பூச்சுகள் தொட்டால் உதிரும் நிலையிலும், கதவு, ஜன்னல்கள் எந்நேரமும் இடிந்து விழும் நிலையிலும் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சென்னை, புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் இருந்த குடிசை வீடுகளை அப்புறப்படுத்தி அப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் இந்த அடுக்குமாடிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு கட்டுமானப் பணிகள் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் பொதுமக்களுக்கு முறையாக வீடுகள் கொடுக்கப்படவில்லை.
வீடுகளில் குடியேற 1.50 லட்சம் பண வசூல்?
கடந்த 2018ஆம் ஆண்டு 864 புதிய வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தக் கட்டடங்களில் கரோனா பரவல் அதிகமாக இருந்த காலத்தில் கரோனா சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டன. ஆனால், டோக்கன் ஒதுக்கப்பட்டவர்களிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என குடிசை மாற்று வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதில் 112.16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு முதற்கட்டமாக 864 வீடுகள் கட்டப்பட்டன. இரண்டாம் கட்டமாக 139.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,056 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று முடிந்தன.
குடியேறியவர்களுக்கு அதிர்ச்சி
இந்நிலையில் டோக்கன் வழங்கப்பட்டவர்களில் 200-க்கும் மேற்பட்டோருக்கு வீடுகள் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் வீடுகள் வழங்கப்படாததால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தில் மக்கள் தாமாகவே குடியேறினர். 'புதிய வீடு, புதிய வாழ்க்கை' என்ற வாரியத்தின் வாசகத்தை நம்பி புதிய வீட்டிற்குச் சென்ற அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.