பொதுவாக இரவு நேரங்களில் தெருக்களின் பாதுகாவலர்களாக தெரு நாய்கள் ஒருபுறம் வலம் வந்தாலும், மற்றொரு புறம் பயணிப்போருக்கு அச்சுறுத்தலாகவும் அவை விளங்கி வருகின்றன.
இவ்வாறு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தெருநாய்களைப் பிடித்து பராமரிக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி செய்துவருகிறது.
2018ஆம் ஆண்டு கணக்குப்படி சென்னையில் மட்டும் மொத்தம் 57 ஆயிரத்து 366 தெரு நாய்கள் இருந்துள்ளன. தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு மண்டலத்திற்கு ஒரு நாய் பிடிக்கும் வாகனம் ஒதுக்கப்பட்டு, அவ்வாகனத்திற்கு ஒரு ஓட்டுநரும், ஐந்து பயிற்சி பெற்ற நாய் பிடிக்கும் நபர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தெருநாய்கள் பெருக்கத்தை தடுக்க கருத்தடை
குறிப்பாக கருத்தடை செய்யப்பட வேண்டிய நாய்களை, இவர்கள் வலைகளைப் பயன்படுத்தி பிடித்து, தங்கள் வாகனங்களில் ஏற்றி, கருத்தடை செய்யும் மையத்திற்கு கொண்டு செல்கின்றனர். கருத்தடை அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, இந்த நாய்கள் கிட்டத்தட்ட ஐந்து நாள்கள் வரை தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றன.
இந்தக் கண்காணிப்பு காலத்தின்போது நாய்களுக்கு உணவு அளிப்பது, அவற்றைப் பராமரிப்பது என அனைத்துப் பணிகளிலும் மாநகராட்சி ஈடுபடுகிறது.
சென்னை மாநகராட்சியின் செல்லப்பிராணிகள் மருந்தகம் மற்றும் நாய் இனக் கருத்தடை மையம் மாநகராட்சியின் நாய் கருத்தடை மையங்கள்
நாய்களுக்கு கருத்தடை செய்ய சென்னையில் லாயிட்ஸ் காலனி, புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை ஆகிய மூன்று இடங்களில் மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் ஒரு மாநகராட்சி மருத்துவர், ஒரு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் என ஐந்து நபர்களுக்கு மேற்பட்டோர் உள்ளனர்.
இம்மையங்கள் தவிர ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா, எம்எஸ்பிசிஏ ஆகிய இரண்டு தொண்டு நிறுவனங்களிலும் மாநகராட்சி உதவியுடன் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது.
மாநகராட்சியின் கணக்குப்படி 2020- 2021ஆம் ஆண்டுகாலத்தில் மட்டும் 10 ஆயிரத்து 193 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மார்ச் மாதத்தில் ஆயிரத்து 353 தெரு நாய்களுக்கும், பிப்ரவரி மாதம் ஆயிரத்து 242 தெருநாய்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டுள்ளது. 2021-2022 காலக்கட்டத்தின் நிலவரப்படி மே மாதத்தில் 953 தெருநாய்களுக்கும், ஜூன் மாதத்தில் ஆயிரத்து 84 தெரு நாய்களுக்கும் என மொத்தம் மூன்றாயிரத்து 12 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் செல்லப்பிராணிகள் மருந்தகம் மற்றும் நாய் இனக் கருத்தடை மையம் வெறி பிடித்தலைத் தடுக்க தடுப்பூசி
தொடர்ந்து, நாய்க்கடி மூலம் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய வெறிநாய்க்கடி நோய் வராமல் தடுக்க, அவற்றுக்கு தடுப்பூசியும், அக, புற ஒட்டுண்ணிகளை நீக்கும் தடுப்பூசியும் போடப்பட்டு பின்னர் பிடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் கொண்டு சென்று விடப்படுகின்றன.
’வெறிநாய்க்கடி நோய் இல்லா மாநகரம்’ எனும் இலக்கினை முன்வைத்து சென்னை மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், இதுவரை 68 ஆயிரத்து 877 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மாதவரம் மண்டலத்தில் எட்டாயிரத்து 846 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
செல்லப் பிராணிகளுக்கும் சிகிச்சை
தவிர, இந்த மூன்று மையங்களிலும் வீட்டு நாய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தனியார் மருத்துவமனையை விட மாநகராட்சி மருத்துவமனை சிறப்பாக உள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த ராதா தெரிவித்துள்ளார்.
"நான் இரண்டு நாய்கள் வைத்து வளர்க்கிறேன். அதுமட்டுமின்று தெரு நாய்களுக்கும் உணவு அளித்தும் வருகிறேன். இந்த மையத்துக்கு இரண்டாவது முறை வருகிறேன். இங்கு சிகிக்சை முறை நன்றாக உள்ளது. தனியார் மருத்துவமனையை விட மாநகராட்சி மருத்துவமனை சிறப்பாக உள்ளது, தனியார் மருத்துவமனையில் செலுத்தப்படும் தடுப்பூசி தான் இங்கேயும் செலுத்தப்படுவதால் எங்களுக்கு இன்னும் வசதியாக உள்ளது" என்றார்.
மேம்படுத்தப்பட உள்ள மாநகராட்சி மையங்கள்
மாநகராட்சியின் மூன்று மையங்களின் கட்டமைப்பை ஒன்பது கோடியே 18 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயில் செலவில் மேற்படுத்த தற்போது மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி, இந்த மூன்று மையங்களின் கட்டடங்களை இரண்டு அடுக்கு கட்டடங்களாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஒரு மாதத்திற்கு தோராயமாக ஆயிரத்து 200 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கட்டமைப்பு வந்த உடன் ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட மூன்றாயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படும் எனவும், இந்தக் கட்டமைப்பை ஆறு மாதங்களில் முடித்து இரண்டு ஆண்டுக்குள் 82 ஆயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதே மாநகராட்சியின் நோக்கம் எனவும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டுப்படுத்தப்பட்ட ரேபிஸ்
சென்னை மாநகராட்சியின் செல்லப்பிராணிகள் மருந்தகம் மற்றும் நாய் இனக் கருத்தடை மையம் தவிர, நாய்களுக்கு என தனி சமாதி ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் நிலையில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதனை மேம்படுத்தவும், புதிய சமாதிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரிய முறையில் பணியாற்றும் சென்னை மாநகராட்சி இவ்வாறு முறையாக தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டு, அவை வெறி பிடிக்காமல் இருக்க தடுப்பூசிகளும் போடப்பட்டு வருவதால் கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னையில் ஒருவர் கூட ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழக்கவில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் மாநகராட்சி அலுவலர்கள்.
இதையும் படிங்க:பசியில் வாடும் தெரு நாய்கள் - உணவளித்து வரும் விலங்குகள் நல ஆர்வலர்கள் !