சென்னை: டிசம்பர் மாதம் என்றாலே, தமிழகத்தில் இயற்கை பேரிடர் மாதமாக மக்கள் மனத்தில் பதிந்துவிட்டது. கடந்த 1964 ஆம் ஆண்டு டிச.22 நள்ளிரவு முதல் மறுநாள் டிச.23 ஆம் தேதி அதிகாலை வரை ருத்ர தாண்டவமாடிய பெயரிடப்படாத அந்த புயல் தனுஷ்கோடி என்ற நகரத்தையே மூழ்கடித்தது. ஒரு மினி சுனாமியின் தாக்குதலுக்கு நிகரான அதன் அழிவுகளை தனுஷ்கோடியில் எஞ்சி இருக்கும் எச்சங்களே நமக்கு இன்றளவும் கூறுகின்றன.
தமிழகத்தின் தென் கிழக்கு எல்லையான தனுஷ்கோடியே ஒன்றுமில்லாமல் ஆன கதையை செவி வழியில் நாம் அறிந்திருந்தாலும், அந்த பகுதியில் மட்டுமின்றி தமிழகத்தில் 80 வயதினரைக் கடந்த அனைவரும் கூறும் உண்மை கதைகளும் இருக்கின்றன.
சிதிலங்கள் சொல்லும் புயலின் கதை தனுஷ்கோடி, அன்றைய காலத்தில் இலங்கை - இந்தியா இடையிலான வணிகத் தொடர்புக்கு மிக முக்கிய துறைமுகமாகவும் திகழ்ந்தது. கடந்த 1961 இல் தமிழக அரசால் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரத் தரவுகளில், தனுஷ்கோடியில் 3,197 மக்கள் வசித்ததாகவும் அங்கிருந்து பருத்தித் துணிகள், பித்தளை, அலுமினியம், கருவாடு, முட்டை, காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிதிலங்கள் சொல்லும் புயலின் கதை அப்படி போக்குவரத்துக்கும் வணிகத்துக்கும் மிக முக்கியமாக இருந்த தனுஷ்கோடி கடந்த 1964 ஆம் ஆண்டு புயலுக்கு பிறகு ஒரு அருங்காட்சியம் போலவும், மேற்கத்திய நாடுகள் குறிப்பிடும் பெயர்களான "லாஸ்ட் சிட்டி, கோஸ்ட் டவுன்" என பொலிவிழந்து காணப்படுகிறது.
தனுஷ்கோடி:தனுஷ்கோடிக்கு புராண ரீதியான கதைகளை வைத்துப் பெயர்க்காரணம் பலவற்றைக் கூறினாலும், தமிழக்த்தின் தென்கிழக்குக் கோடியில் உள்ள நிலமும், வங்கக்கடலும் முத்தமிட்டுக் கொள்ளும் அழகிய நெய்தல் நிலமான இடத்தை சங்க இலக்கியமான அகநானூறில் 70 ஆவது பாடல்
“வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கு முன்துறை”
தொன்முது கோடி என குறிப்பிடுவது தனுஷ்கோடி ஆகும். காலப்போக்கில், தொன்முது என்கிற வார்த்தை தனுவாக மாறி தனுக்கோடி எனவும், தனுஷ்கோடி எனவும் மாறியிருக்க வாய்ப்புகள் உள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படி சங்கக் காலத்தில் இருந்து விளங்கிய ஊரானது, தற்போது இடிபாடுகளின் சுவடுகள் நிறைந்த நகரமாய் உள்ளது. இதற்கு காரணம் அந்த புயல், அதுவும் சுதந்திர இந்தியாவின் சூப்பர் முதல் புயல்.
1964 சூப்பர் புயல் ஓர் பார்வை: கடந்த 1964 ஆம் ஆண்டு, டிச.15ஆம் தேதி தெற்கு அந்தமானில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவானது. இதைத் தொடர்ந்து டிச.18ஆம் தேதி உருவான புயல் மெல்ல மெல்ல இலங்கையை நோக்கி நகர்ந்தது. அங்கிருந்து பலத்த புயலாக மாறி, டிச.22 ஆம் தேதி இலங்கையின் வவுனியாவை தாக்கியது.
சிதிலங்கள் சொல்லும் புயலின் கதை இதைத்தொடர்ந்து பாக் நீரினை பகுதியில், மையம் கொண்ட இப்புயல் டிச.22 ஆம் தேதி நள்ளிரவில் தனுஷ்கோடியை நோக்கித் திரும்பியது. மணிக்கு சுமார் 250 கி.மீ வேகத்தில் புயலின் காற்று வீசப்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் புயலை 5 விதமாக பிரிக்கின்றது. அவை: புயல் (62-87கி.மீ வேகம்), தீவிர புயல் (88-117 கி.மீ வேகம் ), அதி தீவிர புயல் (118-165 கி.மீ வேகம்), மிக திவிர புயல் (165-222கி.மீ வேகம்), சூப்பர் புயல் (இயல்பு நிலைக்கு மீறிய புயல் - 222கி.மீ வேகத்திற்கு மேல்)
தமிழகத்தில் தீவிர புயல் என்று கருதப்படும் கஜாவின் தாக்கத்தை நம்மால் மறந்திருக்க முடியாது அதன் வேகம் 120கி.மீ தான். ஆனால் கடந்த 1964 ஆம் ஆண்டு சூப்பர் புயல் சுமார் 240 முதல் 260 கி.மீ வேகத்தில் வீசியதாகவும், அவ்வப்போது 280 கி.மீ வேகத்தில் வீசியதாகவும் தகவல்கள் உள்ளன.
இந்தியாவில் முதல் சூப்பர் புயல் கடந்த 1737ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கல்கத்தாவைத் தாக்கியது. அதைத் தொடர்ந்து கடந்த 1876 வங்காளத்திலும், கடந்த 1885 ஆம் ஆண்டு ஓடிசாவிலும் வீசியது. அதன் பிறகு, 109 ஆண்டுகள் கழித்து டிசம்பர் மாதம் கடந்த 1964ல் ராமேஸ்வரத்தில் வீசியது.
இதைத் தொடர்ந்து 10 சூப்பர் புயல்கள் வங்ககடலிலும், இந்தியபெருங்கடல், மற்றும் அரபிக்கடலில் உருவானது என்பது குறிப்பிடதக்கது. இறுதியாக கடந்த 2020 ஆம் ஆண்டு 'அம்பன்' புயல் சூப்பர் புயலாக கருதப்பட்டது.
புயலின் பாதிப்புகள்:சுமார் 250 கி.மீ வேகத்தில் வீசிய புயல் காற்றுடன், மிக பலத்த மழையும், காற்றின் வேகத்தில், கடல் அலைகள் ஆழிப்பேரலையாய் மாறி தனுஷ்கோடியைப் புரட்டிப் போட்டது. அன்றைய இரவு உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புயலின் கோரத்தாண்டவத்துக்குப் பலியானார்கள்.
சிதிலங்கள் சொல்லும் புயலின் கதை இதுமட்டுமின்றி தனுஷ்கோடி ரயில் நிலையம், தேவாலயம், பள்ளிக்கூடம், மருத்துவமனை, தபால் நிலையம், பயணியர் தங்கும் விடுதி, கோயில் உள்பட பல கட்டடங்களும் கடந்த 1914ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வந்த சர்வேதச ரயில் பாதை உள்ளிட்டவை இந்த புயலுக்கு இரையாகின.
ரயிலில் தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்த மருத்துவக்கல்லூரி மாணவிகள் உள்ளிட்டப் பயணிகள் அனைவரும் புயலில் சிக்கி பலியானார்கள். இரண்டு தினங்களுக்கு பின் ரயிலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கடற்கரையோரம் ஒதுங்கிய பிறகே இது பற்றி தெரியவந்தாக கூறப்படுகிறது. தற்போது எஞ்சியுள்ள செங்கல் சுவர்கள் மட்டுமே இன்றும் தனுஷ்கோடியின் வரலாற்றைக் கூறிக்கொண்டிருக்கிறது.
முடிவுக்கு வந்த ரயில் பாதை: இன்றைக்கு நினைத்தாலும் வியப்பாக தான் இருக்கும். சென்னை எழும்பூரில் ரயில் டிக்கட் எடுத்தால், கடல் கடந்து கொழும்பு வரை பயணிக்கலாம். அது ஒரு வித்தியாசமான பயணம் தான். தனுஷ்கோடி வரை ரயிலில், பின்னர் கப்பலில் தலைமன்னார் வரை. அதன் பிறகு ரயிலில் கொழும்பு வரை. அது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1914 இல் தொடங்கிய அந்த ரயில் போட் மெயில் (அல்லது) இந்தோ-இலங்கை ரயில் சேவை.
சிதிலங்கள் சொல்லும் புயலின் கதை தெற்கு ஆசியா முழுவதும் ஆட்சி செய்த ஆங்கிலேய அரசு, சிலோனையும் சென்னையில் இருந்த ஆங்கிலேய ஆளுநர்கள் கீழ் வைத்திருந்தது. இந்தியாவை இலங்கையுடன் இணைத்த ரயில் நிலையமும் தனுஷ்கோடியின் சிறப்புகளில் ஒன்றாக இருந்தது.
மேலும், வணிக ரீதியிலும், மக்கள் போக்குவரத்திலும், தனுஷ்கோடி முக்கியத்துவம் பெற்றிருந்தது. இவ்வாறு 100 ஆண்டுகளுக்கு முன்னர் ராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடியே பிரசித்தி பெற்று இருந்தது. கடந்த 1914 இல் இருந்து செயல்பட்ட போட் மெயில் ரயில், சுதந்திரத்திற்கு பிறகும் கடந்த 1964 வரை நீடித்தது.
சிதிலங்கள் சொல்லும் புயலின் கதை அதன்பிறகு, 1964 டிசம்பர் 22 ஆம் தேதி கோரப்புயலில் தாண்டவத்தால், பயணிகளுடன் பயணித்த பயணிகள் ரயிலும் கடலுக்குள் மூழ்கியது. பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர். தனுஷ்கோடியையே கடல் கொண்டது. தலைமன்னாருடனான கடல்வழித் தொடா்பும் நின்றுவிட்டது. இதனை நினைவுபடுத்த மன்னாரில் இப்போதும் கலங்கரைவிளக்கம் இருக்கிறது. அதை ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது இலங்கை அரசு.
தனுஷ்கோடி சுற்றுலாத்தலம்:புயல் பாதிக்கபட்ட பிறகு, ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சரியான போக்குவரத்து வசதி என்பது இல்லை. மணற்பரப்பில் செல்லும் "ஃபோர் வீல் ஜீப்" தான் பெரிய போக்குவரத்து சாதனம்.
சிதிலங்கள் சொல்லும் புயலின் கதை இதனால் அந்த பகுதிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு முன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக தான் இருந்தது. ஆனால், தனுஷ்கோடிக்கு ரூ.55 கோடியில் புதியதாக முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல் முனை வரை மத்திய அரசு 2017 ஆம் ஆண்டு சாலை அமைத்தது.
அதன் பிறகு, அதில் இருந்து அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் அரிச்சல் முனை வரை செல்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் தற்போது புயலின் சிதைவுகளை பார்த்துச் செல்கின்றனர்.
புயலால் பாதிக்கபட்ட அந்த நகரம் பெருமளவான குடும்பங்கள் இல்லை என்றாலும், சில நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் தற்போதும் தனுஷ்கோடியில் தான் உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிதைந்த கட்டடங்களையும், இந்தியாவின் எல்லைகளிலும், அடிப்படை வசதியின்றி அல்லல்படும் மீனவ குடும்பங்களின் வாழ்க்கைத் துயரத்தை பார்த்து விட்டு தான் செல்கின்றனர்.
சிதிலங்கள் சொல்லும் புயலின் கதை ராமேஸ்வரம் நாட்டுப் படகு மீனவர் நல உரிமை சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பி. ராயப்பன் இந்த புயலைப் பற்றி கூறுகையில், " கடந்த 1964 ஆம் ஆண்டு புயலை நான் பார்த்தது இல்லை. ஆனால் அந்த கதைகளை கேட்டுத்தான் அன்றைய தலைமுறைகள் வளர்ந்து இருக்கிறோம். இன்றைக்கு இருக்கும் அளவுக்கு நான்கு நாட்கள் முன்பே புயலுக்கு பெயர் வைத்து புயலை பற்றி தகவல்கள் அந்த காலத்தில் இல்லை. ஆனால், என் பெற்றோர்கள் நேரில் பார்த்து தப்பியதாக கூறுவார்கள். புயலால் ஏற்பட்ட சேதங்கள் இன்றளவும் அதன் தாக்கத்தை மக்களுக்கு கூறிக்கொண்டு தான் இருக்கிறது என தெரிவித்தார்”.
அப்போது தமிழ் சினிமாவில், முன்னனி ஜோடியாக இருந்த ஜெமினி கணேசனும், சாவித்திரியும் ஒரு படப்பிடிப்புகாக ராமேஸ்வரம் வந்துள்ளனர். தனுஷ்கோடியைச் சுற்றி பார்க்க வந்த அவர்களிடம் மீனவர்கள் "கடல் சீற்றமாக உள்ளது. உடனே ராமேஸ்வரம் திரும்பி செல்லுங்கள்" என்று கூறியதையடுத்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். இல்லையெனில் அந்தப் புயலில் இருவரும் சிக்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
புயலில் தப்பியது குறித்து அன்றைய தமிழ் நாளிதழுக்கு பேட்டி கொடுத்த நடிகை சாவித்திரி கூறியதாவது,“அன்று இரவு 8 மணிக்கு மேல் பெரும் சத்தத்துடனும், புயல் அடிக்க துவங்கியது. காற்று இவ்வளவு பலமாக வீசுகிறதே என்ன நடக்குமோ நாங்கள் பயத்தில் இருந்தோம். பொழுது விடிந்ததும் பங்களாவை விட்டு வெளியே வந்தோம். எங்கும் ஒரே வெள்ளக்காடாக கிடந்தது. புயலின் முழு பயங்கரத்தையும் அப்போதுதான் நாங்கள் உணர்ந்தோம்.
நாங்கள் வைத்திருந்த ஆயிரம் ரூபாயைக் கொண்டு புயலால் வீடு வாசல்களை இழந்து தவித்தவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தோம். மேலும் கடந்த டிச.25ஆம் தேதி அமைச்சர் கக்கன் பாதிப்புகளை பார்வையிட வந்தார்,” என தெரிவித்துள்ளார்.
சிதிலங்கள் சொல்லும் புயலின் கதை மேலும், இது குறித்து சுற்றுலா வழிக்காட்டி சதிஷ் பிரபு கூறுகையில், “தனுஷ்கோடி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது போதிய வசதி இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகத் தான் இங்கு சாலை அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் கடலில் விளையாடும்போது அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களைக் காப்பாற்ற போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை.
ஏன் முறையான கழிவறை வசதிகள் கூட இங்கு இல்லை. சிதிலமடைந்த கட்டடங்களை நினைவுச் சின்னங்களாக உள்ளபடி பராமரிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தோம். அடிக்கடி ஒவ்வொறு சிதலங்கள் இங்கும் சிதலங்கள் ஆகி வருகின்றன. இதேநிலை தொடருமானால் வரும் எதிர்காலத்தில் தனுஷ்கோடி குறித்த வரலாறு தெரியாமலே போய்விடும்” என்று தெரிவித்தார்.
சிங்களத் தீவினிற்கோா் பாலம்:இந்திய அரசு தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக பாலம் அமைக்கும் பேச்சுவார்த்தையை கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தப் பாலம் அமைக்க ரூ. 22 ஆயிரம் கோடி நிதி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கியும் முன்வந்தது. ஆனால் இத்திட்டத்தில் இலங்கை அரசு அப்போது ஆர்வம் காட்டவில்லை.
கரோனா பாதிப்பால், இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகித்த சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஆடை தயாரிப்பு ஆகிய மூன்றும் முற்றிலுமாகப் பாதிப்படைந்தது. இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. தற்போது இலங்கையிலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து தொடங்க முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
இப்போது, இலங்கைக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்கலாம். மேலும் தனுஷ்கோடிக்கும், இலங்கையில் உள்ள தலை மன்னாருக்கும் இடையே பாலம் அமைப்பதற்கான திட்டம் குறித்த பேச்சு வார்த்தைகளும் மீண்டும் இலங்கை தரப்பிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தஞ்சையில் ஊர்வலம் சென்ற 500 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்..! கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு..!