சென்னை : ரவுடிகளை ஒழிக்க தமிழ்நாடு காவல்துறை ஸ்டார்மிங் ஆபரேஷனை கையில் எடுத்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், காவல்துறையின் இந்த ஆபரேஷன் யாரை திருப்தி படுத்துவதற்காக நடந்தது? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவு முதல் தமிழக காவல் துறையால் திடீரென ஸ்டார்மிங் ஆபரேஷன் என்ற பெயரில் பழைய குற்றவாளிகள் உள்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரவுடிகளின் வீடு மற்றும் அவர்கள் பதுங்கி இருக்கக்கூடிய இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் சோதனையின் மூலம் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயிரக் கணக்கான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆபரேஷன் முன்பகை காரணமாக அதிகளவில் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதைத் தடுப்பதற்காகவும், ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்குவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக காவல்துறை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.
52 மணி நேரமாக நடந்த இந்த ஆபரேஷன் ரவுடிகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆபரேஷனின் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் 21 ஆயிரத்து 592 பழைய ரவுடிகள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். அதில் 3 ஆயிரத்து 325 பேர் கைது செய்யப்பட்டதாகவும், நீதிமன்ற வழக்குகளின் பிடியாணைப்படி 294 பேர் கைது செய்யப்பட்டதாகவும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 972 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நன்னடத்தைக்காக பிணை ஆணை பெறப்பட்டு 2 ஆயிரத்து 526 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட ரவுடிகளிடமிருந்து 7 நாட்டு துப்பாக்கி, ஆயிரத்து 110 கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தமிழ்நாடு காவல்துறை மூலம் அறிக்கையாக தகவல் வெளியிடப்பட்டது. அதேபோல மாநிலத்தின் தலைநகரான சென்னையிலும் 257 ரவுடிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 52 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டது.
ஆனால் காவலர்களின் இந்த "ஸ்டார்மிங் ஆபரேஷன்" ரவுடிகள் மத்தியில் உண்மையான ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதா? என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். சென்னையில் நடுரோட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்று, பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி சம்போ செந்தில், பாம் சரவணன், சீசிங் ராஜா, காஞ்சிபுரம் டான் ஸ்ரீதரின் டிரைவர் தினேஷ் சிறையில் இருந்தே எதிர் தரப்பினருக்கு ஸ்கெட்ச் போடும் ரவுடி நாகேந்திரனின் கூட்டாளிகள் என முக்கிய ரவுடிகளின் பட்டியலில் உள்ள முதல் 10 பேரில் ஒரு ரவுடி கூட இந்த ஆபரேசனில் போலீசாரால் கைது செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.