தமிழ்நாட்டில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம் காணொலி வழியே நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ச. மயில் தலைமையேற்றார். இதில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை பின்வருமாறு:
தீர்மானம் எண் : 1
கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைத்து பணியாளர்களுக்கும், சொந்த ஊர்களுக்குச் செல்லும் போது உயிரிழந்த இடம்பெயர் தொழிலாளர்கள், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான க.மீனாட்சிசுந்தரம் ஆகியோரின் மறைவிற்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தீர்மானம் எண் : 2
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (விடுபட்ட பாடங்கள்) ரத்து செய்தல் குறித்து வெளியிடப்பட்ட அரசாணையை விமர்சித்து தொலைக்காட்சி, பத்திரிகைகளில் கருத்து வெளியிட்டதாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இணைப்புச் சங்கங்களான தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவரும், தஞ்சாவூர் மாவட்டம் மனையேறிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியருமான மா.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் திண்டுக்கல் மாவட்டம், நல்லமனார்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியருமாகிய பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீது பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதி 17 ( ஆ ) ன் கீழான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என இம்மாநிலக்குழு பள்ளிக்கல்வித்துறையை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
பள்ளிக் கல்வித்துறையின் மீது அக்கறை கொண்டு, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசாணை எண் : 54இன் மீது மேற்படி சங்கத்தலைவர்கள், தங்கள் சங்கத்தின் கருத்துக்களை தெரிவித்ததை பள்ளிக்கல்வித்துறை விமர்சனமாக எடுத்துக் கொள்ளாமல் ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொண்டு கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னை தொடர்பாக ஜூலை 20ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலக்குழு கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தீர்மானித்திடவும் முடிவு எடுக்கப்பட்டது.
தீர்மானம் எண் : 3
கரோனா பேரிடர் ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதும் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2020-21ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம், மாணவர்களின் கற்றல், கற்பித்தல் தொடர்பாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இணைப்புச் சங்கங்கள் தனித்தனியாக அறிக்கையொன்றை மாநிலக்குழுவிற்கு அளித்திட தீர்மானிக்கப்பட்டது.