தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டெர்லைட் விவகாரம் - மக்கள் அதிகாரம் அமைப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - Sterlite affairs

சென்னை: 2004ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்ததாக கூறுவது குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்க மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட்

By

Published : Aug 22, 2019, 5:57 PM IST

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி குழந்தைகளின் பெற்றோர் மீதும், பேனர் வைத்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், 2004ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு வெளியாகி 13 ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் வாதிட்டார்.

இதை கேட்ட நீதிபதிகள் பள்ளி குழந்தைகள் போராட்டத்தில் கலந்து கொண்டதால் அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்தனர். மேலும் விவிஐபிகளை மலர் தூவி வரவேற்பதற்கு பள்ளி குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர் என குற்றம் சாட்டினர்.

மேலும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பேனர் வைத்ததற்கு உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல் துறை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வைக்கப்படும் பேனர்களுக்கு எதிராக ஏன் வழக்குப் பதிவு செய்வதில்லை எனவும் கேள்வி எழுப்பினர். குறிப்பாக அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளின் இரு பக்கங்களிலும் விளம்பர போஸ்டர்கள் மட்டுமே உள்ளதாகவும், புதிதாக யாராவது சென்னைக்கு வந்தால் அவர் எந்த சாலையில் உள்ளார் என கண்டுபிடிக்க இயலாதவாறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் 13 ஊழியர்கள் விஷவாயு தாக்கி இறந்திருப்பதாக, மக்கள் அதிகாரம் தீவிரமான குற்றச்சாட்டை முன் வைப்பதால், இது குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்க மக்கள் அதிகாரம் அமைப்பு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details