2018ஆம் ஆண்டு மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த பாத்திமா பாபு தரப்பு வழக்கறிஞர் யோகேஸ்வரன் ஆஜராகி வாதாடினார். அபாயகரமான கழிவுகளோடு அனுமதி இல்லாமல் கடந்த 5 ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆலை இயங்கியுள்ளதாகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2018 செப்டம்பரில் எஸ்ஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு செய்ததில், ஆலை கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் ஆர்சனிக், கோபால்ட், தாமிரம் உள்ளிட்ட விஷத்தன்மை கொண்ட கனிமங்கள் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டதாகவும் கூறினார்.
இது மத்திய அரசின் விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது என்று தெரிவித்த வழக்கறிஞர் யோகேஸ்வரன், 1993இல் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல், இயக்குவதற்கான உரிய அனுமதியும் இல்லாமல் மத்திய, மாநில அரசுகளிடம் முன்னரே உரிமம் பெற்றுள்ளதாகவும் கூறினார். 1995இல் ஆண்டிற்கு 40 ஆயிரம் டன் காப்பர் என தினமும் 274 டன் பிளிஸ்டர் (98% சுத்தமானது) காப்பர் உற்பத்தி செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்று சட்டவிரோதமாக தினமும் 391 டன் காப்பர் உற்பத்தி செய்துள்ளது என்றார்.
2004இல் புதிய கட்டுமானம், உற்பத்தி அதிகரிப்பு மற்றும் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்த போது அனைத்து கட்டுமானங்களையும் ஸ்டெர்லைட் ஆலை ஏற்கனவே முடித்து விட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், 2003-2004இல் ஒரு லட்சத்து 10 ஆயிரம் டன் உற்பத்தி செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கிய நிலையில், 2007இல் ஆண்டிற்கு நான்கு லட்சம் டன் உற்பத்தி செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
2013 மார்ச் 23ஆம் தேதி ஏற்பட்ட நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான மக்கள் தூத்துக்குடியில் சுவாசக்கோளாறால் பாதிக்கப்பட்டதாகவும், ஆலையில் இருந்து கசிவு ஏற்படவில்லை என்றாலும், அங்கிருந்து வெளியேறிய சல்பர்டை ஆக்ஸைடு வாயுவே காரணம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் உறுதிப்படுத்தியது என்றார். காற்றில் சல்பர்டை ஆக்ஸைடு மாசுபாட்டின் அளவு 470 பிபிஎம் அளவை தாண்டக்கூடாது என்ற நிலையில், 1,123 பிபிஎம் அளவு சல்பர்டை ஆக்ஸைடு கலந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இதனால் அபாயகரமான கழிவுகளை கொண்ட ஆலையை இயக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்காத நிலையில், கடந்த 2013 முதல் சட்டவிரோதமாக ஆலை இயங்கி வந்தது என தனது வாதத்தை வழக்கறிஞர் யோகேஸ்வரன் நிறைவு செய்தார். இதையடுத்து ஆலைக்கு எதிராக மக்கள் அதிகாரம் தரப்பில் வாதம் செய்ய வழக்கு புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.