சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் இன்று (மே18) உத்தரவிட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு பிரமுகர்களும் இந்தத் தீர்ப்பினை வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது. “32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வந்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மற்றவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - ஸ்டாலின் தமிழ்நாடு அரசு வைத்த வழக்கறிஞர்களின் வாதங்களையும் ஏற்று பேரறிவாளன் விடுதலை என்ற தீர்ப்பு கிடைத்துள்ளது. 7 பேர் விடுதலையில் கழக அரசு முனைப்புடன் இருக்கும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்ததை தற்போது நிறைவேற்றியுள்ளோம்.
அதேபோல மனித உரிமை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை என்று வரவேற்கப்பட்டாலும், மாநிலத்தின் உரிமையானது இந்தத் தீர்ப்பின் மூலம் மிக கம்பீரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் முடிவு மற்றும் அதன் கொள்கைகளில் ஆளுநர் தலையிட முடியாது என்று நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மிகவும் முக்கியமான ஒன்று. ஆளுநர் செயல்படாத நேரத்தில் நீதிமன்றம் தலையிடும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மாநில அரசின் கொள்கை மற்றும் அரசியல் முடிவுகள் குறித்து ஒன்றிய அரசிடம் எதுவும் கேட்கத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்துவத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவே இதை நான் கருதுகிறேன். தனது மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை களைய எந்த ஒரு எல்லைக்கும் சென்று போராடிய அற்புதம்மாள், தாய்மைக்கு இலக்கணமாக திகழ்கிறார்.
இந்த தீர்ப்பு தாமதமாக கிடைத்தாலும் மனித உரிமை மட்டுமல்ல, மாநில உரிமைகளும் இதில் நிலை நாட்டப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும் 6 பேர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் முழுமையாக பெறப்பட்ட பின், சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:Perarivalan release: ’வீரப்பனின் சகோதரர் மாதையனையும் விடுதலை செய்ய வேண்டும்’ - ராமதாஸ்