சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையம் உள்கட்ட அமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் நவீன விமான நிலையமாக 2.21 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் ரூபாய் 2,467 கோடி திட்டத்தில் இரண்டு கட்டங்களாக கட்டுவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் கடந்த 2018ஆம் ஆண்டில் முடிவு செய்து பணிகளைத் தொடங்கியது. அதில் முதல் கட்டப் பணி 1.36 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் ரூ. 1,260 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது.
இதனை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி முறைப்படி திறந்து வைத்தார். இதை அடுத்து புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் டெர்மினல் 2 (டி2) என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய முனையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதியில் இருந்து சோதனை ஓட்டங்கள் நடக்கத் தொடங்கின. அதன் பின்பு படிப்படியாக சர்வதேச புறப்பாடு, வருகை விமானங்கள் புதிய முனையத்திற்கு மாற்றப்பட்டு வந்தன.
இந்த ஜூலை 7ஆம் தேதியில் இருந்து புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் டெர்மினல் 2 முழு அளவில் இயங்கத் தொடங்கி விட்டன. இதை அடுத்து ஏற்கனவே சர்வதேச விமானம் முனையமாக செயல்பட்டு வந்த, டெர்மினல் 3 மற்றும் டெர்மினல் 4 இம்மாதம் 10ஆம் தேதியில் இருந்து முழுமையாக மூடப்பட்டு உள்ளது. அடுத்த சில வாரங்களில் டெர்மினல் (டி3) இடிக்கும் பணி தொடங்க இருக்கிறது.
அது முழுமையாக இடிக்கப்பட்ட பின்பு சென்னை விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கு இடையே சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தற்போது பயணிகள் போக்குவரத்து விமான சேவைகள் போன்றவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இதனால் தற்போதைய உள்நாட்டு விமான நிலையத்தில் இட நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
எனவே தற்போதைய உள்நாட்டு விமான நிலையத்தில் இட நெருக்கடி காரணமாக கூடுதல் விமான சேவைகள் இயக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதை அடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான முனையத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே சர்வதேச முனையமாக செயல்பட்ட டி3, டி4 தற்போது மூடப்பட்டுள்ள நிலையில் உள்ளன.