சென்னை:வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் 40க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணபடுத்தி ராகிங் செய்ததாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இறுதி ஆண்டு பயிலும் 7 மாணவர்களை கல்லூரி நிர்வாகம், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து காவல் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இளநிலை மருத்துவப்படிப்பில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் தடுப்பதற்கான குழு அமைக்கப்பட்டு மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து , கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்திமலர் கூறும்போது, “அரசு மருத்துவக் கல்லூரிகள் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
மூத்த மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்வதைத் தொடர்ந்து கண்காணிக்க பேராசிரியர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல் படி அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமராக்கள் 25 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காட்சிகளை தேசிய மருத்துவ ஆணையம் பார்க்கும் வகையில் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் சாந்திமலர் கல்லூரிகளில் மாணவர்களை கண்காணிக்கவும், அவர்களுக்கு உதவிடவும் விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பேராசிரியர்களை தொடர்பு கொள்வதற்கான எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆலாேசனை வழங்கவும் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கல்லூரியில் ராகிங் செய்யக்கூடாது என்பது மாணவர்களுக்கும், பெற்றோர்களும் தெரியும். அதனையும் மீறி சில மாணவர்கள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
மூத்த மாணவர்கள் இளைய மாணவருக்கு ராகிங் செய்யும் போது அதன் பாதிப்பிற்கு ஏற்ப தண்டனை வழங்கப்படும். முதலில் கல்லூரியில் குழு அமைத்து விசாரணை செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். ராகிங் குறித்த புகார் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சென்றால் அதன் பின்னர் மீண்டும் விசாரணை செய்யப்பட்டு, குற்றத்திற்கு ஏற்ப சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன், ஒரு வருடம் தேர்வு எழுத முடியாத நிலையோ ஏற்படலாம். அதிகப்பட்சமாக மாணவர்கள் வேறு எந்தப் படிப்பினையும் படிக்க முடியாத நிலையும் ஏற்படும்.
கல்லூரிக்கு வரும் முதலாம் ஆண்டு மாணவர்களை தனியாக விடுதியில் தங்க வைக்கிறோம். அவர்களை தொடர்ந்து 3 மாதங்கள் வீட்டுச் சூழல் வரும் வரை கண்காணித்து வருகிறோம். மூத்த மாணவர்கள் இளைய மாணவர்களை ராகிங் செய்வதை தவிர்த்து விட்டு, தங்களின் அனுபவங்களை கற்றுத் தர வேண்டும்” என கூறினார்.
சென்னை ஒமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி சென்னை ஒமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி கூறும்போது, “சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ராகிங் குறித்தும், அதற்கான தண்டனைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்வதை தடுக்கும் வகையிலும், ராகிங் இல்லாத வளாகமாக உருவாக்கும் வகையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குழுவின் விபரங்கள் வகுப்பறைகள், விடுதிகளில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களை பெற்றோர்கள் தினமும் தொடர்பு கொண்டு பேச வேண்டும் எனவும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக பேராசிரியர்கள், முதல்வருக்கும் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராகிங் செய்தால் குற்றத்தன்மைக்கு ஏற்ப தண்டனை வழங்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:வீதியில் படித்த போட்டி தேர்வர்களுக்காக நவீன சென்டர்.. நெல்லை ஆட்சியர் அசத்தல்!