சென்னை:தமிழ்நாட்டில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஜூலை இறுதிக்குள் முடிவு செய்ய வேண்டுமெனவும், சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் ஆட்சேபங்களைப் பெற்று, ஆசிரியர்களின் எண்ணிக்கையை இறுதி செய்து, உபரி ஆசிரியர்களை, இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென கால நிர்ணயம் செய்தும் அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த நடைமுறையின் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது தொடர்பான உத்தரவை கடந்த ஜனவரி 23ஆம் தேதி தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மரிய அக்சிலியம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் அம்பிகாவேணி, சகாயராணி, மரியம்மா டெய்சி எஸ்.எஸ்.கே.வி. அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மரிய அக்சீலியம் பள்ளி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல தங்கள் பள்ளி ஆசிரியைகள் ஜெசிந்தா, அஸ்வினி, பாத்திமா ஜெயமேரி, ஏஞ்சல் சகாய ரீகா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து டாக்டர் கே.கே.நிர்மலா மகளிர் மேல்நிலைப் பள்ளி தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது.