செங்கல்பட்டு மாவட்டம் முதலியார் குப்பத்தில் அமைந்துள்ள முகத்துவராத்திற்கு அருகே தழுதாளி குப்பத்தின் கடற்கரையொட்டிய பகுதிகளில் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதியின்றி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அலையாத்தித் தாவரங்கள் நிறைந்த, ஆமைகள் முட்டையிடும் இந்த பகுதி மீன் இனப்பெருக்கத்திற்கு முக்கியமானது.
இதனை ஒட்டிய இடத்தில் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையின் கீழ் அனுமதி பெறாமல், மணல் மேடுகளை அழித்து சுற்றுலாத்துறை, கழிப்பிடங்கள், கான்க்ரீட் தூண்கள், குடில்கள், சுற்றுச்சுவர்கள் உள்ளிட்ட கட்டுமான பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே, அனுமதியின்றி நடைபெறும் இந்த கட்டுமான பணியினை தடுக்க வேண்டும் என மீனவர்கள் கண்ணப்பன், பன்னீர் ஆகியோர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.