சென்னை: தமிழ்நாட்டில் மோசடி, போலி, பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு சட்டப்பேரவையில் மத்திய பதிவுச்சட்டத்தில் தமிழ்நாடு அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம், போலிப்பதிவுகள் குறித்து மாவட்ட பதிவாளரே ஆய்வு செய்து, அவற்றை ரத்து செய்ய முடியும்.
பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்தப் பதிவை தானாக முன்வந்தோ? புகார் மீதோ? எழுதிக் கொடுத்தவருக்கும், ஆவணத்தின் அனைத்து தரப்பினருக்கும் மற்றும் தொடர்ச்சியான ஆவணங்கள் இருந்தால் அவற்றின் தரப்பினருக்கும், பதிவு ரத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கும், இந்த பத்திரப்பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்டு அறிவிப்பு வழங்க வேண்டும்.
அதற்காக பதில் பெறப்பட்டால், அதைக் கருத்தில்கொண்டு ஆவணப்பதிவை பதிவாளர் ரத்து செய்யலாம். பதிவுத்துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு. பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப்பதிவு ரத்துசெய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆரோக்கியதாஸ் என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், மத்திய சட்டத்திற்கு முரணாக இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், புதிய சட்டத்திருத்தம் மத்திய சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.