சென்னை:கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.
பேருந்துகள் கொள்முதல்
இந்த சட்டப்படி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, இன்று (ஜூலை 22) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10 விழுக்காடு பேருந்துகள் மட்டும் மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்ய வசதியாக கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார்.
இதில், அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகளுடன் குறிப்பிட்ட பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மோசமான சாலைகளை மேம்படுத்திய பின், சட்டப்படியும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.