உலகிலேயே மிகப்பழமையான இரண்டாவது கண் மருத்துவமனையாக, சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை வளாகத்தில், கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக, 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள சுமார் 75 மரங்களை வெட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகத்தின் இம்முடிவை எதிர்த்தும், மரங்களை வெட்டத் தடை விதிக்கக்கோரியும் அதே பகுதியைச் சேர்ந்த கேப்டன் பி.பி. நாராயணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
அதில், மருத்துவமனை வளாகத்தில் மரங்கள் இல்லாத காலியிடங்கள் இருக்கும் நிலையில், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அங்குள்ள மரங்களை வெட்டுவது சட்டவிரோதமானது. எனவே, மரங்களை ஊழியர்களோ? நிர்வாகமோ? வெட்டத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கை, விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, சி.சரவணன் அமர்வு, எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்திலுள்ள மரங்களை வெட்ட இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், புதிய கட்டடம் கட்டுவதற்கான மாற்று இடங்கள் என்ன? தற்போதுள்ள மரங்களை வேறு இடங்களில் நட்டுப் பராமரிக்க வாய்ப்புள்ளதா? எனவும் மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதனையும் படிங்க : அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி!