ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சத்யநாராயண பாலிஷெட்டி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சட்டவிரோதமாக மாங்குரோவ் காடுகளை அழித்து வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரும் மத்திய அரசின் "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா" திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் கே. ராமகிருஷ்ணன், நிபுணர் உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா அமர்வு, "ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தீர்ப்பாயத்தின் உத்தரவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா" திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாதவர்களுக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு மாறாக 100 ஏக்கர் பரப்பளவில் மாங்குரோவ் காடுகளை அழித்து வீடு கட்டி தரும் திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. தீர்ப்பாயம் நியமித்த குழு அளித்த அறிக்கையின் படி மாங்குரோவ் வனப்பகுதியில் வீடுகள் கட்ட முடிவெடுத்திருப்பது தெளிவாகிறது.
ஆந்திர அரசின் இந்தத் திட்டத்திற்கு எதிராகவும், சிலர் பட்டா கேட்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். குறிப்பிட்ட கட்டுமானம் மேற்கொள்ளப்படவுள்ள பகுதி மாங்குரோவ் காடுகளுக்குள் வருகிறதா? அதற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதி தேவையா? வனத்துறை அனுமதித் தேவையா? கோரிங்கா வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதா? எனத் தீர்ப்பாயம் அறிய விரும்புகிறது.