சென்னை:திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையும் மாநில நெடுஞ்சாலையில் இணையும் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைக்க மாவட்ட திமுக சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்தப் பகுதியில் சிலை வைப்பதால் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பக்தர் கார்த்திக் என்பவர் சிலை வைக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிலை அமைப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்கக்கோரி சிலை அமையவுள்ள இடத்துக்கு உரிமையாளரான ஜீவா கல்வி அறக்கட்டளை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ் மற்றும் முகமது ரபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (ஜூன் 02) விசாரணைக்கு வந்தபோது, தனியார் பட்டா நிலத்தில் சிலை வைப்பதை எதிர்த்து எப்படி பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பி இந்த வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்கள்.