சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், திமுக உறுப்பினர் ஐ. பெரியசாமி பேசுகையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிற்கு போதிய வசதிகளை இந்த அரசு செய்து தரவில்லை என்று குற்றம்சாட்டினார்.
அரிய பொக்கிஷமான நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டு, தற்போது அங்குள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஐ. பெரியசாமி, அதனை தருவதற்கு தயார் என அந்நாடு அறிவித்தும், சிலையை மீட்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் புகார் தெரிவித்தார்.
மேலும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அலுவலர் பொன். மாணிக்கவேலுக்கு, தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததை சுட்டிக்காட்டிய அவர், அங்கும் அதே உத்தரவு வந்த பிறகும் எந்த ஒரு வசதிகளும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.
சிலைகள் என்பது விலை மதிப்பில்லாதது எனவும், தமிழர்களின் வரலாறு அடங்கியது எனவும் தெரிவித்த ஐ. பெரியசாமி, 'இப்படிப்பட்ட ஒரு முக்கியமான பிரிவிற்கு போதிய வசதி செய்து தராததற்கு காரணம், உங்களது, ‛ஈகோ’தான்' என்று ஆவேசமாகக் பேசினார்.