சென்னை: இந்திய கல்வி வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்ற உயர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் தலைவர் சீதாராம் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, ''கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களை ஒருங்கிணைத்து இந்திய கல்வி வளர்ச்சி குழுமம் நடத்தும் இந்த கருத்தரங்கு பயனுள்ளது. அனைத்து மாநிலங்களையும் அவர்கள் கல்விக் கொள்கையை பின்பற்ற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மாநிலங்கள் தங்கள் கல்வி தரத்தை உயர்த்திக் கொள்ள உரிமை வழங்கப்பட வேண்டும்.
17 ஆண்டுகள் நான் பல்கலைக்கழகங்களில் பேராசியராகப் பணியாற்றி உள்ளேன். எனக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் என்ன நிலையில் இருப்பார்கள் என்று நன்றாகத் தெரியும். மேலும் கல்வியின் தரத்தை மேம்படுத்த முதலமைச்சர் விரும்புகிறார். அதற்காகப் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் தற்போது மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது.
இதனையடுத்து பாலிடெக்னிக் கல்லூரிகளை மேம்படுத்த தொழில்துறை 4.0 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கையில் ஒரு சில வரவேற்கத்தக்க நல்ல விஷயங்கள் இருந்தாலும், அதில் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பல முடிவுகளை நாங்கள் எதிர்க்கிறோம். 3ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு நுழைவுத் தேர்வு வைத்தால் அவர்கள் எவ்வாறு எழுத முடியும். தங்கள் கல்வியைத் தொடராமல் நிறுத்தி விடுவார்கள் எனக் கூறினார்.
அது போன்ற நிலை எதிர்காலத்தில் நடைபெறக் கூடாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கான தனிக் கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறோம். அனைத்து மாநிலங்களும் தங்களுக்கென தனிக்கல்வி கொள்கை வைத்துள்ளது. மாநிலங்கள் ஊக்கப்படுத்தி அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.