சென்னை: தமிழ்நாட்டில் கோயில்கள் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில், சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம்கள் கட்ட வேண்டும், அறங்காவலர்களை நியமிக்க வேண்டும், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும், கோயில் நிலங்களுக்கு வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 75 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (நவ.11) மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி எத்தனை கோயில்களில் ஸ்ட்ராங் ரூம்கள் கட்டப்பட்டுள்ளன என நீதிபதிகள், அறநிலையத்துறை தரப்புக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு, ஒரு ஸ்ட்ராங் ரூம் கட்டப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் பதில் அளிக்கப்பட்டது.