சென்னை:ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள் என 150-க்கும் அதிகமானோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆணைய தரப்பும் சசிகலா தரப்பும் விசாரணையை நிறைவு செய்துள்ள நிலையில் அப்போலோ மருத்துவர்களிடம் அப்போலோ தரப்பு வழக்கறிஞர்கள் மறு விசாரணை நடத்தினர்.
மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திடம் இரண்டு நாட்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இன்று(ஏப்.26) அதிமுகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் புகழேந்தியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அனைத்து தரப்பு விசாரணையும் இன்றுடன் முடிந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நாளை முதல் தொடங்கப்பட உள்ளன.
ஜூன் 24ஆம் தேதியுடன் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைய உள்ள சூழலில் அதற்குள் விசாரணை அறிக்கையைத் தயாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.