சென்னை: அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்குச் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மூன்றாம் பாலினத்தவர் அமைப்பைச் சேர்ந்த பி.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கிய போதும், அவர்களுக்கு இதுவரை எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்சநீதிமன்றம் ஏற்கனவே மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன்கார்டு மற்றும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு என சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டது போல, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.