சென்னை:ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் நேற்று (ஜூன்.29ஆம் தேதி) முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு அறிவித்தது.
இதனிடையே, இது குறித்து பேசிய பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்ளதாவது, "அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும். கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ள அரசு மருத்துவர்களிடம் தமிழ்நாடு அரசு பேச வேண்டும். சமூகத்தின் அங்கமாக விளங்கும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை களத்தில் நிற்கும்.
அரசு மருத்துவர்களுக்குத் தகுதிக்கேற்ற ஊதியம் தர தமிழ்நாடு அரசு 2009ஆம் ஆண்டு அரசாணை எண் 354 வெளியிட்டது. தான் போட்ட அரசாணையைத் தானே பத்தாண்டுகளாகியும் முழுமையாக நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு இருந்த காரணத்தால், மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்தினர்.
மருத்துவர்கள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தமிழ்நாடு முழுவதும் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 27, 2019 அன்று "அரசாணை 354ன் படி ஊதியக்கோரிக்கை 6 வாரத்தில் நிறைவேற்றப்படும்" என்ற வாக்குறுதியை எழுத்துப்பூர்வமாகத் தமிழ்நாடு அரசு கொடுத்தது.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது மட்டுமல்லாமல், போராடிய மருத்துவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையாக, பலநூறு கிலோமீட்டர் தொலைவில் பணியிடமாற்றம் செய்து அரசு மருத்துவர்களைப் பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியது, தமிழ்நாடு அரசு. அரசின் அணுகுமுறை உருவாக்கிய நெருக்கடியினால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி, உடல் பாதிக்கப்பட்டு இறந்து போனார், அரசு மருத்துவர்களின் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மக்கள் மருத்துவர், லட்சுமி நரசிம்மன்.
அன்றைய தினத்தில் அரசின் ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர்களுக்குக் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. அனைத்து அரசியல் கட்சிகளும் மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தன. அரசால் வஞ்சிக்கப்பட்ட போதும், பெருந்தொற்றுக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்புடன் தொண்டாற்றினர், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள்.
நோய்த்தொற்றின் முதல் அலையில் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அரசு மருத்துவமனைகள் மட்டுமே இயங்கின. தங்களின் உயிரைப்பற்றிக் கவலைப்படாமல், அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவமனை செவிலியர், மருத்துவ ஊழியர்கள் முதலானோர் பெருந்தொண்டாற்றிப் பல லட்சம் உயிர்களைக் காப்பாற்றினர்.