தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் விலக்கு பெற பொதுப் பள்ளிக்கான மேடை கூறிய தீர்வு!

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் இணைந்து போராட வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 22, 2023, 3:20 PM IST

சென்னை:நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதற்குப் போராட்டங்களை வலுப்படுத்துவதே தீர்வாக இருக்கும் எனவும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு இன்று (பிப்.22) வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலை முழுமையாக உணராமல், சிக்கல்களைத் தனித் தனியாகப் பார்க்கிறோம். இந்திய மக்களின் இறையாண்மையை, இந்திய ஒன்றிய ஆட்சிப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் இறையாண்மையாக ஆள்வோரால் கருத்துருவாக்கம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி என்பதை நீர்த்துப்போக செய்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற கருத்துருவாக்கம் நடைபெறுகிறது. ஜனநாயகம் பலவீனப்படும்போது மக்கள் தங்களின் உரிமைகளை இழக்கின்றனர். அரசிற்கு அடங்கி நடந்தால் மட்டுமே வாழ முடியும் என்ற அளவில் நமது சுதந்திரம் பறிபோகிறது. நாளுக்குநாள் சிக்கல் பெருகிக்கொண்டே போகிறபோது, நமது மௌனம் மிகவும் கவலைக்குரியது.

"தமிழ்நாடு மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைச் சட்டம் 2021" குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு இதுவரை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கான பரிந்துரையை ஒன்றிய அரசு செய்யாமல் பல்வேறு உத்திகளைக் கையாண்டு காலம் தாழ்த்துகிறது.

இதை மருத்துவ மாணவர் சேர்க்கை நடவடிக்கையாகப் பார்ப்பது அரசியல் தெளிவின்மையின் வெளிப்பாடாகும். இறையாண்மை கொண்ட மாநிலச் சட்டப் பேரவையின் மசோதா இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிட பரிந்துரை செய்ய ஒன்றிய அரசு மறுக்கிறது. இதை மக்கள் மன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

ஒவ்வொரு செயலிலும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத, மாநில உரிமைக்கு எதிரான நடவடிக்கைகள் அமைந்துள்ளது என்பதை மக்களிடம் அம்பலப்படுத்தாமல், வெள்ளை மாளிகைகளில் அமர்ந்து தமக்குள்ளேயே சிக்கல்களைப் பேசிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் அணுகுமுறை மிகவும் ஆபத்தானது' என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் பின்வருமாறு விளக்குகிறார். அவையாவன,

"நீட்" தகுதிப்படுத்தும் தேர்வு அல்ல. "நீட்" வணிக மயத்தையும் ஒழிக்காது, தகுதியானவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதையும் உத்தரவாதப்படுத்தாது.

"நீட்" ஒரு சூதாட்டம். முதல் முறை, இரண்டாம் முறை, மூன்றாம் முறை என்று தொடர்ந்து பயிற்சி மையங்களில் பணத்தை இழந்து, கடைசியாக மருத்துவப் படிப்பிலும் சேர முடியாமல் மாணவர் எதிர்காலமே இந்தச் சூதாட்டத்தில் சூன்யமாகிறது.

"நீட்", "கியூட்" இரண்டும் மாணவர்களை வைத்து நடத்தப்படும் வணிகச் சூதாட்டம்.

"நீட்" சூதாட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல லட்சம் மாணவர்களின் எதிர்காலம் சூறையாடப்பட்டுள்ளது. பல லட்சம் குடும்பங்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பை இழந்துள்ளனர்.‌

"நீட்" பயிற்சி மையங்களால் முறையான பள்ளிக் கல்வி முறை சிதைக்கப்படுகிறது. பயிற்சி மையங்கள் பள்ளிகளுக்கு மாற்றாக உருவெடுக்கிறது. மன உளைச்சலிலும், மிகப் பெரும் அச்சுறுத்தலிலும் தங்களின் குழந்தைப் பருவத்தில் ,இளமைக் காலத்தில் மாணவர்கள் வாழவேண்டிய சூழல் உருவாகிறது.

இவற்றை உணராமல் "நீட் " ஏதோ மாணவர்களைத் தகுதிப்படுத்தும் கல்வி முறைப் போல பேசிக்கொண்டு இருப்பது சமூகநீதி, சமதர்ம அரசியலைப் புரிந்து கொள்ளாத நடவடிக்கையாக இருக்கிறது. இந்தச் சிக்கலை நீதிமன்றம் முழுமையாக உணர்ந்துவிட முடியாது. நீதிமன்றம் இந்தச் சிக்கலைத் தீர்க்க இயலாது.

"நீட்" எனும் வணிகச் சூதாட்டத்தை ஒழிக்க நீதிமன்றத்தை நாடுவது தீர்வாகாது. தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதற்குப் போராட்டங்களை வலுப்படுத்துவதே இதற்குத் தீர்வாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

ஒன்றிய அரசே நீட், கியூட் சூதாட்டத்தை உடனே நிறுத்து.தமிழ்நாடு மருத்துவ இளநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைச் சட்டம் 2021" ‍குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிட உடனே ‌ பரிந்துரை செய்! அன்னியப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் ‍‌ ‍ கிளைகள் திறக்க அனுமதிக்காதே! அரசுப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள், அரசுப் ‍ பல்கலைக்கழகங்களை வலுப்படுத்து, விரிவுப்படுத்து! என்ற முழக்கங்களுடன் வீதியில் இறங்கிப் பேராட அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அடுத்தடுத்து டார்கெட் செய்யப்படும் நாதக வேட்பாளர்

ABOUT THE AUTHOR

...view details