சென்னை:சென்னையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில், மாநில குளிர்பதன மருந்து கிடங்கின் கூடுதல் கட்டடத்தையும், மருந்துகள் விநியோக மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு, மாநில அளவிலான மின் அலுவலக சேவைகளையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தற்போது தடுப்பூசிகளின் அவசியம் என்பது ஏராளமாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் சுமார் 10 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 9.16 லட்சம் பச்சிளம் குழந்தைகளுக்கு 11 வகை தடுப்பூசிகள் அளிப்பதன் மூலம், 12 வகையான தடுப்பூசியினால் தடுக்கப்படக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசினால் வழங்கப்படும் தடுப்பூசி மருந்துகள் அனைத்தும் மாநில தடுப்பூசி மருந்து கிடங்கில் பெறப்பட்டு, 10 மண்டல தடுப்பு மருந்து கிடங்குகளுக்கு குளிர்பதன முறையில் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் மண்டல தடுப்பு மருந்து கிடங்குகளிலிருந்து 46 மாவட்ட தடுப்பு மருந்து கிடங்குகளுக்கு அனுப்பப்படுகிறது.
இதனை மேலும் மேம்படுத்துவதற்காக சுமார் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கூடுதலாக 2 குளிர்பதன அறைகள் மற்றும் 2 உறை நிலை வைப்பு அறைகளும் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் கூடுதலாக 1 கோடி தடுப்பு மருந்துகளை சேமிக்கலாம். மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், தாலுகா மற்றும் தாலுகா அல்லாத அரசு மருத்துவமனைகளில் உள்ள குளிர் பதன இடங்களுக்கு, தடுப்பு மருந்து வழங்கப்பட்டு பயன்படுத்தும் வகையில் இன்று குளிர் பதனக்கிடங்கிற்கு கூடுதல் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மருந்து விநியோக மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு மாநில அளவில் உருவாக்கப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த கண்காணிப்பு அமைப்பு இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் (TNMSC) சார்பில் மருந்துகள் கொள்முதல் செய்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கட்டமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கு முன்னாள் பாம்புக்கடி மற்றும் நாய்கடிக்கான மருந்துகள் வட்டார அரசு மருத்துவமனைகளிலும், மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால், தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இன்று தொடங்கப்பட்ட இந்த மருந்துகள் விநியோக மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பின் மூலம், மருந்துகளின் இருப்பை மாநில அளவிலும், அனைத்து சுகாதார மாவட்ட அளவிலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் வாரியாக கண்காணிக்க முடியும். குறிப்பாக உயிர் காக்கும் மருந்துகளான நாய்க்கடி மற்றும் பாம்புகடி மருந்துகள், தொற்றா நோய்களுக்கான மருந்துகள், அம்லோடிப்பின், அடினலால், மெட்பார்மின் போன்ற மாத்திரைகள் அனைத்தும் இருப்பு கண்காணிக்கப்பட்டு வழங்கப்படும். தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் இந்த மென்பொருள் தயாரித்து, முறையான பயிற்சி, அனைத்து துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்திற்கும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
மின் அலுவலகச் செயலாக்கம் என்பது அலுவலக நடைமுறைகளை மின்னணு முறையில் நடத்துவதற்கான ஒரு வலை பயன்பாட்டு கருவியாகும். இதன் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படும். இந்த திட்டதின் மூலம் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை, இயக்குநரகத்தில் செயலாக்கப்பட்ட கோப்புகளை விரைவாக முடிப்பதற்கும், அதன் மூலம் தாமதங்களைத் தவிர்ப்பதற்கும் பயன்படுகிறது. இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, இதை அனைத்து 45 சுகாதார மாவட்டங்களுக்கும் 385 வட்டார ஆரம்ப சுகாதார நிலைய அலுவலகத்திற்கும், மின்-அலுவலக சேவை அமலாக்கம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் வலது கையை இழந்ததா 1½ வயது குழந்தை? - நடவடிக்கை என்ன?