சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக 30 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2019 ஆம் ஆண்டு ஆளுநருக்குக் கருணை மனு அனுப்பிய நிலையில், கருணை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், அது தொடர்பான விவரங்களைத் தர வேண்டும் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆளுநர் அலுவலக தகவல் அலுவலருக்கு விண்ணப்பித்ததாகக் கூறியுள்ளார்.
அதன் மீது ஆளுநர் மாளிகை பதிலளிக்காததால், இதே கேள்விகளுடன் மத்திய தகவல் ஆணையத்திற்கு மனு அளித்ததாகவும், அந்த மனு மாநில தகவல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது வரை அந்த மனுவிற்கு எந்த பதிலும் வராததால், தனது மனுவுக்குப் பதிலளிக்கும்படி மாநில தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபானி முன்பு இன்று (நவ.29) விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தகவல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மாநில தகவல் ஆணையத்திற்கு ஏராளமான மனுக்கள் வருகின்றன.
அதில், வரிசைப்படி பேரறிவாளனின் மனுவைப் பரிசீலித்து பதில் அளிக்கப்படும்' எனப் பதில் தெரிவித்தார். அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கோட் போடுவது ரீப்பீட்டு, டீ குடிப்பது ரிப்பீட்டு: ஸ்டாலினை கிண்டலடித்த ஜெயகுமார்