சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில், வெங்கடேசன் என்பவரைக் கொலை செய்ய முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதாகக் புகார் எழுந்தது. விசாரணை என்ற பெயரில் கிடுக்கிகளை கொண்டு பற்களைப் பிடுங்கியதாகவும், புதிதாகத் திருமணமானவரின் ஆண் விதைப்பைகளை நசுக்கிச் சேதப்படுத்தியதாகவும் மாவட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது புகார் எழுந்தது.
இது குறித்துப் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இந்த விவகாரம் தொடர்பாகத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுதந்திரமான முறையில் விசாரணை நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரையடுத்து, உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், பெரிய கிடுக்கிகள் கொண்டு பற்கள் பிடுங்கப்பட்டதாகவும், வாயில் காட்டுமிராண்டித்தனமாக லத்தியால் காவல்துறையினர் தாக்கியதாகக் கூறுகின்றனர்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்குச் சமீபத்தில் திருமணம் நடந்ததாகக் கூறியும், அவரின் விதைப்பையை நசுக்கி கொடுமைப்படுத்தியுள்ளனர் என நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தது. இந்த புகார் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை பிரிவு ஐஜி 6 வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணைய தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், பற்கள் பிடுங்கப்பட்டதாகக் கூறப்படும் 5 பேர் மனித உரிமைகள் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் சாட்சிகள் மற்றும் மருத்துவர்களிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளனர். அனைத்து விசாரணைகளும் முடிந்ததும், விரைவில் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கிடம் மனித உரிமை ஆணையத்தின் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க:ஏப்.8-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!