சென்னை: குழந்தை ராயப்பன் என்பவர் எழுதிய மதுரை வீரன் உண்மை வரலாறு புத்தகத்தை ஆதித் தமிழர் பேரவை என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இந்தப் புத்தகங்கள் ஆட்சேபணைக்குரிய, திரித்து எழுதப்பட்ட தகவல்களைக் கொண்டதாக இருப்பதோடு, பல சமூகத்தினரை விமர்சனம் செய்வதாகவும் சாதியவாதத்திற்கு காரணம் என்று குற்றம்சாட்டுவதாகவும் இருப்பதாக கூறி, இந்தப் புத்தகங்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தடை விதித்தது.
இந்த தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் புத்தகத்தை எழுதிய குழந்தை ராயப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல புத்தகங்களை எழுதியுள்ளதாகவும், தான் ஒரு சமூக ஆர்வலர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தான் எழுதிய மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்தில் மதுரை வீரனின் வீரத்தை குறிப்பிட்டு எழுதப்பட்டது என்றும் சாதி ரீதியாக எதுவும் குறிப்பிடவில்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த புத்தகம் அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்ற புத்தகம் என்றும் தன்னிடம் உரிய விளக்கம் கேட்கப்படாமல் இந்த புத்தகம் தடைவிதிக்கப்பட்டதால் தடையை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.