சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் 11ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 2022 - 2023ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு, கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 வரை நடைபெற்றது. பள்ளிகளில் படித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 பேர் தேர்வெழுத விண்ணப்பித்தனர்.
இவர்களில் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரத்து 908 மாணவர்கள், 4 லட்சத்து 12 ஆயிரத்து 779 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் தேர்வினை எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வினை தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 224 மையங்களில் மாணவர்கள் எழுதினர்.
அதேநேரம், புதுச்சேரி பள்ளிகளில் படித்த 6 ஆயிரத்து 799 மாணவர்கள், 7 ஆயிரத்து 577 மாணவிகள் என 14 ஆயிரத்து 376 பேர் 40 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதினர். தனித் தேர்வர்களாக 2 ஆயிரத்து 356 மாணவர்களும், 2 ஆயிரத்து 979 மாணவிகளும் மற்றும் 3 மூன்றாம் பாலினத்தவர்களும் என 5 ஆயிரத்து 338 பேர் 135 மையங்களில் தேர்வு எழுதினர்.
அதேபோல், தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2022 - 2023ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20 வரை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 352 பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்கள், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகள் தமிழ்நாட்டில் உள்ள 3 ஆயிரத்து 976 மையங்களில் தேர்வினை எழுதினர். புதுச்சேரியில் உள்ள 287 பள்ளிகளில் படித்த 7 ஆயிரத்து 911 மாணவர்கள், 7 ஆயிரத்து 655 மாணவிகள் என 15 ஆயிரத்து 566 பேர் 49 தேர்வு மையங்களில் எழுதினர்.